AR Rahman: விவாகரத்து குறித்து அவதூறு வீடியோக்கள்.. பறந்த வக்கீல் நோட்டீஸ்.. ஏ.ஆர். ரஹ்மான் அதிரடி!
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு என இருவரும் தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், திரைத்துறையினருக்கே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து பலரும் பலவிதமாக ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து குறித்துன் பல்வேறு அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வீடியோக்கள் வெளியிட்டனர். இந்நிலையில் தனது விவாகரத்து தொடர்பாக அவதூறு கருத்துக்களைப் பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களுக்கு, ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகின் உச்சத்தில் இருக்ககூடிய இசை அமைப்பாளராக உள்ளார். தமிழில் அறிமுகமானலும் இந்திய திரையுலகின் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளராக உள்ளார். தனது இசைப்பயணத்தைத் தொடங்கியதில் இருந்து இப்போதுவரை, ஃபீல்ட் அவுட் என்ற சொல்லை எதிர்கொள்ளாத வெகு சில இசை அமைப்பாளர்களில் ஏ.ஆர். ரஹ்மானும் ஒருவர்.

இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரைக் காதலித்தும் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரஹீமா ரஹ்மான், கதிஜா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்த ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்து: ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தனது விவாகரத்து தொடர்பாக அறிவித்த அடுத்த நாளில், ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக இருக்ககூடிய மோனிகா தே தனது கணவரைப் பிரிவதாக அறிவித்தார். எனவே பலரும் இவர்கள் இருவரையும் சேர்த்துவைத்துப் பேசினர். இன்னும் சொல்லப்போனால் இருவரது விவாகரத்து குறித்தும் பல சர்ச்சைக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பக்கபலம்: இந்நிலையில் ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் என இருவரும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அவதூறு கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்தும் கண்டனங்களைத் தெரிவித்தும் வந்தனர். இப்படியான நிலையில், பல செய்தி நிறுவனங்கள் மோனிகா தேவிடம் பேட்டி கேட்டுள்ளனர். அதற்கு மோனிகா தே மறுப்பு தெரிவித்துவிட்டதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

வக்கீல் நோட்டீஸ்: இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில், " தனது விவாகரத்து தொடர்பாக உண்மைக்குப் புறம்பான அவதூறு பரப்பும் வீடியோக்கள், சமூக வலைதளப் பதிவுகள், செய்திகள் அனைத்தையும் உடனடியாக நீக்கவேண்டும். இல்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் இந்த அதிரடியான செயல் அவரது குடும்பத்தினர்ரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











