AR Rahman: ஆஸ்கர் விருது எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை -ஏஆர் ரஹ்மான்!
சென்னை: இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏஆர் ரஹ்மான். புது வெள்ளை மழையில் துவங்கிய இவரது இசைப்பயணம் தொடர்ந்து மழைச்சாரலாய் ரசிகர்களை தாலாட்டி வருகிறது.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள ஏஆர் ரஹ்மான், தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட், ஹாலிவுட்டிலும் தன்னுடைய கொடியை பறக்கவிட்டு வருகிறார்.
தமிழில் பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட பல படங்களில் இவரை பார்க்க முடிகிறது. ஆஸ்கர் விருதே பெற்றாலும் தன்னுடைய தாய் மண்ணை மறக்காத குணத்தை கொண்டவராக உள்ளார்.

ஆஸ்கர் விருது சிறப்பான கௌரவத்தை கொடுத்ததாக ஏஆர் ரஹ்மான் பேச்சு: தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராக இருந்த சேகர் என்பவரின் மகனான திலீப்குமார்தான் பின்னாளில் ஏஆர் ரஹ்மானாக மாறி, இசை சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார். சிறுவயதிலேயே வாத்தியங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய தந்தையிடம் இதன் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்துள்ளார். பின்னாளில் அவரது தந்தையின் இறப்பையடுத்து முழுநேரமாக இசைத்துறையில் நுழைந்திருக்கிறார்.
எம்எஸ்வி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் பணியாற்றிய ஏஆர் ரஹ்மான், துவக்கத்தில் விளம்பரப் படங்களுக்கு ட்யூன் போட்டுக் கொண்டிருந்துள்ளார். கடந்த 1992ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார். தொடர்ந்து அவரது இசைப்பாதையில் எல்லாமே ஏறுமுகம்தான்.
சமீபத்தில் தமிழிலும் பொன்னியின் செல்வன் பாகங்கள் உள்ளிட்ட பல படங்களில் இவரை காண முடிகிறது. இந்நிலையில் சமீபத்தில் மரியான் படத்தின் 10 ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினருடன் இணைந்து கேள்வி -பதில் செஷனாக கொண்டாடினார். இதையடுத்து தனது சமீபத்திய பேட்டியில் ஆஸ்கர் விருது குறித்து பேசியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இசையமைத்ததற்காக ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

ஆஸ்கர் விருதை தன்னுடைய இரு கைகளிலும் ஏந்தி, எல்லாப் புகழும் இறைவனுக்கே என தமிழை உலக மேடையில் ஏற்றினார். ஆஸ்கர் விருது மட்டுமில்லாமல் கோல்டன் க்ளோம் பாஃப்டா விருதுகளையும் சர்வதேச அளவில் பெற்றுள்ளார் ஏஆர் ரஹ்மான். இந்நிலையில் ஆஸ்கர் விருது தனக்குள் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தனது சமீபத்திய பேட்டியில் ஏஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த விருதிற்கு பிறகு தனக்கு அதிகமான கௌரவம் கிடைத்ததாகவும் அதிகமான மக்களை தன்னுடைய இசை சென்றடைந்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த விருது பெற்றதால் தனக்கு எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாடல் எளிமையாகவும் மக்களை கவரும்வகையிலும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











