பவதாரணியின் கையெழுத்தை போட்டு பணம் சுருட்டலா? தீனா நீ பண்றது சரியில்ல.. கடுப்பான கங்கை அமரன்!
சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்து இருப்பதாக கங்கை அமரன் இசையமைப்பாளர் தீனா மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இந்த பகீர் குற்றச்சாட்டு இசையமைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்தது.

அதன்படி, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 18ந் தேதியான இன்று நடைபெறுகிறது. இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாக, சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
கங்கை அமரன் பேட்டி: இதுகுறித்து, சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசினார். திரைப்பட உலகில் தொழிலாளர்களுக்காக துவங்கிய முதல் சங்கம் இது தான். இதற்கு பிறகு தான் மற்ற யூனியன்கள் எல்லாம். அந்த காலத்தில் தின சம்பளம் கிடையாது. அவர்கள் போராடி வாங்கி தந்தனர். அவர்கள் கருணையால் நாங்கள் நன்றாக இருக்கிறோம்.
இதுதான் ரூல்: இளையராஜா வந்து உட்கார்ந்து இருக்க வேண்டிய இடம் இது. எங்கள் வீட்டில் நடந்த துக்க செய்தி உங்களுக்கு தெரியும். அதனால் அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன் என்று சொல்வதில் பெருமைப்பட்டு கொள்கிறேன். இந்த யூனியனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருப்பதால் தான் அத்தனை பேரும் எங்களுடன் இருக்கிறார்கள். இந்த யூனியன் தொடங்கப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட ரூல் படி, ஒருவருக்கு இரண்டு வருட பதவி, 2 வருடம் நீட்டித்து கொள்ளலாம். இந்த சங்கத்தில் தொடர்ந்து ஆண்டவர்கள் யாருமில்லை.
இது என்ன அரசியல் கட்சியா: ஆனால், கடந்து கொண்டிருக்கும் இந்த தேர்தலில், தீனா அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் ஆண்டிருக்கிறார். அடுத்தும் நாம் தான் ஆள போகிறோம் என்று இருக்கிறார். இதற்கு நாங்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. இது என்ன அரசியல் கட்சியா அவர் மட்டும் ஆளவேண்டும் என்பதற்கு, அனைவரும் தலைவர்களாக இருந்து அனுபவத்தை பெற வேண்டும் என்று இளையராஜா உட்பட அனைவரும் கூறி இருக்கிறோம்.
பவதாரிணி பெயரில் மோசடி: மேலும், இந்த யூனியனில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா காலத்தில் பணம் கோரி பலர் கையெழுத்து போட்டதாக சில விஷயங்கள் நடந்த இருக்கிறது. இதில் இறந்து போன பவதாரிணி கையெழுத்து போட்டு கூட பணத்தை எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய 80 லட்சத்துக்கும் மேல் பணத்தை சுருட்டியுள்ளனர். அது தெரிந்து விடும் என்பதால், அதை சரி செய்ய, மறுபடியும் தலைவராக நினைக்கிறார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.
தீனா நீ பண்றது சரியில்லை: திரைப்பட உலகின் இசைக்கு இளையராஜா தான் முக்கியமான ஆளாக இருக்கிறார். தீனா நீ பண்றது சரியில்லை. ஒருவர் 4 வருடம் தான் என சொல்லியும், அவர் சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பாருன்னு யாராவது சொல்வாங்களா. இளையராஜாவை தூக்கி எறிந்து பேசிய ஆள் எங்களுக்கு தேவையில்லை. எங்களை வளர்த்து விட்டவர். நம் அறிவை வளர்த்தவர் இளையராஜா. அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்பது போல தீனா இருக்கிறார். இதை பற்றி நான் அண்ணாமலையிடம் சொன்னேன். இப்போது அவர் பிஜேபியில் இருக்கிறார். மேலே மோடி கீழே இவரா? அப்போது மோடிக்கு பிறகு இவர் தானா. அந்த மாதிரி திமிர், தெனாவட்டில் இருக்கும் ஆட்கள் நமக்கு வேண்டாம் என்று கங்கை அமரன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications