அந்த விஷயத்துக்கு ரஜினி தான் வருவாரு.. விஜய் அஜித் வரவேமாட்டாங்க.. தேவா எதைச் சொல்கிறார்?
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இசையமைப்பாளர்களுல் ஒருவர் தேனிசைத் தென்றல் தேவா. தமிழ் சினிமா மிகவும் கொண்டாட வேண்டிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இவர். அவரது இசையை கேட்டாலே கண்டுபிடித்துவிடலாம் என்று கூறும் அளவுக்கு கானா பாடல்களை, அதன் மெட்டுக்களை தமிழ் திரையிசையில் கொண்டு வந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியவர் தேவா. இவர் சமீபத்தில் இவரது இசையில் உருவாகியுள்ள படமான மாண்புமிகு பறை படத்தைன் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் அஜித் குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், " நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து சுமார் 20, 25 பறை இசைக் கலைஞர்களை அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று, அங்கு முக்கியமான நகரங்களில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி, அவர்களுக்கு பறை சொல்லிக் கொடுத்தேன். ஒரு நாள் நாங்கள் அனைவரும் மேடையில் பறை இசைத்துக் கொண்டு இருந்தபோது, ஆஸ்திரேலியாவின் எம்.பிக்களும் மேயரும் வந்து எங்களிடத்தில் பறையை வாங்கி இசைத்தார்கள். எனக்கு அண்மையில் கூட ஆஸ்திரேலியாவில் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பறையை அனைவரும் கொண்டாட வேண்டும், அனைவரும் மதிக்க வேண்டும். நான் படங்களுக்கு இசை அமைக்கும்போது பல முன்னணி நடிகர்களுக்கு இசை அமைத்துள்ளேன். நான் இசை அமைக்கும்போது கம்போசிங்கில், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ஒருநாளும் வந்து கலந்து கொண்டு கம்போசிங்கை பார்த்தது இல்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனது கம்போசிங்கின்போதும் வந்து பார்ப்பார்.
ரஜினி மட்டும் தான்: நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். எனது பாடல்களை எந்த முன்னணி கதாநாயகர்களும் பாராட்டியது இல்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டும் தான் எனது பாடல்கள் நன்றாக இருக்கும் போது போன் செய்து பாராட்டுவார். மற்ற நடிகர்களும் இவரைப் போல பாராட்டுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் ஒருவரும் அப்படிச் செய்யாததால் மற்றவர்களுக்கு இப்படியான பழக்கம் எல்லாம் இல்லை என்று நினைத்து விட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மகிழ்ச்சி: மேலும் இன்றைக்கும் ஆயுதபூஜை என்றால் அங்கு ஆட்டோக்காரன் பாடல் தான், மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கடந்த 34 வருடங்களாக, வராரு வராரு அழகர் வாராரு பாடல் தான், அம்மன் கோவில் விசேஷங்கள் என்றால், கோலவிழியம்மா.. ராஜ காளியம்மா பாடல் தான் இசைக்கப்படுகிறது. இப்படி விழாக்களில் எனது பாடல்கள் ஒலிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











