Deva: காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன்.. எனக்கு அது முக்கியம்.. இசையமைப்பாளர் தேவா பளீச்!
சென்னை: இசையமைப்பாளர் தேவா 90களில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இருந்தவர். தன்னுடைய இசையால் மட்டுமில்லாமல் குரலாலும் ரசிகர்களை கட்டி போட்டவர். கானா பாடல்கள் தான் இவரது ஸ்பெஷல். விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்துள்ளார்.
கானா பாடல்கள் மட்டுமில்லாமல் மெலடி பாடல்களிலும் இவரது தனித்தன்மை சிறப்பாக வெளிப்பட்டன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, தற்போதும் தன்னுடைய குரலால் அடுத்தடுத்த இசையமைப்பாளர்கள் இசையில் பாடி வருகிறார்.

இசையமைப்பாளர் தேவா: மாட்டுக்கார மன்னாரு படம் மூலம் கடந்த 1986ம் ஆண்டில் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. இந்தப் படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள தேவா, 400க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த குரலில் அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தன்னுடைய இசையில் ஏராளமான கானா பாடல்களை இவர் பாடியுள்ளார். கானா பாடல்கள் என்றால் தேவா தான் தற்போதுவரை நியாபகத்திற்கு வருவார். அந்த வகையில் விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, சலோமியா, ஜித்து கில்லாடி என பல பாடல்கள் இவரது வாய்ஸில் ரசிகர்களை கவர்ந்தன.
முன்னணி நடிகர்களுடன் கூட்டணி: தற்போதும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடி வருகிறார் தேவா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட அடுத்தடுத்த மொழி படங்களிலும் இசையமைத்துள்ளார் தேவா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் ஏராளமான பாடல்களை கொடுத்துள்ளார். சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். வாலி மற்றும் முகவரி படங்களில் இசையமைத்ததற்காக இவருக்கு ஃபிலிப்பேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கானா பாடல்கள்: கானா பாடல்கள் மட்டுமில்லாமல் மெலடி பாடல்களும் இவருக்கு கைவந்த கலையாக இருந்தது, ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களுக்கு இவர்தான் இசையமைத்துள்ளார். குறிப்பாக பாட்ஷா படம் தேவா இசையில் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. இந்த படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய பாடல்களுக்கு தான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். காப்பி ரைட்ஸ் மூலம் தனக்கு பணம் கிடைக்கும் ஆனால் புகழ் கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார்.
நோ காப்பி ரைட்ஸ்: தன்னுடைய பாடல்களை தற்போது வரை சமீபத்திய படங்களில் பயன்படுத்துவதாகவும் இதன் மூலம் தான் அடுத்தடுத்து ரசிகர்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2k கிட்ஸ் வரைக்கும் தன்னை தெரிவதாகவும் பணத்தை விட தனக்கு இது மிகவும் முக்கியம் என்றும் தேவா மேலும் கூறியுள்ளார். இளம் தலைமுறை வரை தன்னுடைய பாடல்களை ரசிப்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார், இந்த விவகாரத்தில் இளையராஜா அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு உள்ளாகிவரும் நிலையில் தேவாவின் இந்த பதில் கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











