Ilayaraaja: ராஜா ராஜாதான்.. யூடியூப் சேனல் தொடங்கிய இளையராஜா.. முதல் வீடியோவே தரமா இருக்கே!
சென்னை: இளையராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம். இவரது இசையின் தாக்கம் இல்லாத இசைப்பாளர்கள் இன்றுவரை தமிழ் சினிமாவில் இல்லை. அந்த அளவிற்கு தனது இசையால் அனைவரையும் கட்டி ஆட்சி செய்தவர் என்றே கூறலாம். ரீமேக் படங்களுக்கு இசை அமைக்கும்போதும் கூட, இளையராஜாவின் இசைதான் ஒர்ஜினல் வெர்ஷன் படங்களைவிட பல மடங்கு சிறப்பாக இருக்கும். நடமாடும் இசைப் பல்கலைக்கழகமாகவே இளையராஜா திகழ்கின்றார் எனலாம். தற்போது அவர் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உலக அளவில் அறியப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 80களில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து இசை அமைத்தும் வருகின்றார். நேற்று முன்தினம் கூட அதாவது அக்டோபர் 25ஆம் தேதிகூட, இவரது இசையில் கிஃப்ட் என்ற படம் உருவாகின்றது என அறிவிப்பு வெளியானது. இசையில் தொழில்நுட்பங்கள் கலந்து இசையின் நிலையும் அதன் ரசிகர்களின் ரசனையும் வேறு தளத்திற்கு மாறிவிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் அதில் பலர், இளையராஜாவால் இனி கொடிகட்டிப் பறக்க முடியாது என கிண்டலடிக்கவும் செய்தனர், ஆனால் ராஜா எப்போதும் ராஜாதான் என இன்றும் நிரூபித்து வருகின்றார் இளையராஜா.

இசைமைப்பாளர் ஷேன் ரோல்டன் ஒருமுறை கூறும்போது, 'இளையராஜாவுக்கு இருக்கும் கர்வம் என்னைப் பொறுத்தவரை சரியானதுதான் என்பேன். கலைஞனுக்கு பொதுவாகவே கர்வம் இருக்கும் என்பார்கள். ஆனால் இளையராஜா அவ்வளவுதான் இனி அவரால் ஹிட் கொடுக்க முடியாது, இசை அமைக்க முடியாது என பலர் கூறிவரும்போது, இன்றைக்கும் ஹிட் கொடுத்து உங்களை உருக வைக்கின்றார், தனது இசையால் அழ வைக்கின்றார் என்றால் அவர் ராஜாதான்' எனக் கூறினார்.
புரட்சி: அதேபோல் இளையராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இன்றைக்கு இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக உள்ளார். இவரது இசையை கொண்டாடாத, பாராட்டாத ஆட்களே இல்லை எனலாம். இவரை காலி செய்ய நினைத்தவர்களின் எண்ணங்களை காலி செய்தவர் இளையராஜா. இது தொடர்பாக இசை அமைப்பாளர் தென்மா பேசுகையில், "இளையராஜாவின் இசையில் நான் புரட்சியைத் தேடவில்லை. இளையராஜாவே ஒரு புரட்சிதான்" என கூறியிருந்தார்.

இசை: இளையராஜா தனது இசைக் கோர்ப்புகளை இப்போதுவரை மிகவும் பத்திரமாக வைத்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது இசைக்கோர்ப்புகளையும் பாடல்களையும் பின்னணி இசையையும் வெளியிடும் வகையில், புதியதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் இந்த யூடியூப் சேனலை எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் தொடங்கியுள்ளார். இதில் தனது பின்னணி இசைகள் தொடங்கி, சிம்பொனி, இசைக்கச்சேரிகள் என பலவற்றை பதிவிடப்போகின்றார் என கூறப்படுகின்றது.

யூடியூப் சேனல்: இளையராஜா தற்போது தொடங்கியுள்ள யூடியூப் சேனலுக்கு 'Ilaiyaraaja BGM's Official' எனப் பெயரிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல் இதில் முதல் வீடியோவாக புன்னகை மன்னன் படத்தின் பின்னணி இசையை அப்லோட் செய்துள்ளார். மேலும் இந்த பின்னணி இசைக்கு மாண்டேஜ் ஃபுட்டேஜாக இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று எடுக்கப்பட்ட வீடியோக்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 25 ஆயிரம் பேருக்கு அதிகமாக பார்த்துள்ளனர். மேலும் இதுவரை இந்தச் சேனலை இதுவரை 10 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இளையராஜா யூடியூப் சேனல் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











