என் குருநாதர் அப்படி சொல்லிவிட்டார்.. உடனே செய்தேன்.. இளையராஜா ஓபன் டாக்
சென்னை: இசைஞானி இளையராஜா இப்போதும் இளம் இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் இந்தத் தலைமுறையினரையும் அவர் வெகுவாக ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இச்சூழலில் அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை போலவே இளையராஜாவின் இசைக்கும் தனித்த வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக அவரது இசையமைப்பில் இன்னும் சில படங்களும் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் சந்தித்த அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

இளையராஜாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "க்ளாசிக்கல் இசையை வைத்துக்கொண்டுதான் சினிமாவில் ஹார்மோனியத்தின் இசை சிஸ்டத்தை நான் கொண்டு வந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையிலும் இந்த ஹார்மோனிய சிஸ்டம் இருக்கிறது. கிட்டார் வாசிப்பவரை ட்யூனுக்கு ஏற்றபடி கிட்டாரை வாசிக்க சொன்னால் அவரே தீர்மானம் செய்துகொண்டு இசையை வாசிப்பார். ஆனால் ஹார்மோனிய இசையில் நீங்கள் இசைக்குறிப்பை கொடுத்து உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்க வேண்டும்.
அமோக வரவேற்பு: ஒருமுறை நான் பாடலை ரெகார்ட் செய்துகொண்டிருந்தேன். அப்போது எனது குருநாதரான ஜிகே வெங்கடேசனிடம் சென்று அன்னக்கிளி கதையாசிரியர் செல்வராஜ், அந்தப் படத்தின் பாடல்களுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதற்கு ஜிகேவியோ, 'அவன் (இளையராஜா) பாட்டெல்லாம் நன்றாகத்தான் போடுவான். ஆனால் அவன் பின்னணி இசையை அமைக்க முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே எனக்குள்ளோ, இவர் இப்படி சொல்லிவிட்டாரே என்று ஒரு முடிவெடுத்தேன்.
என்ன முடிவு: அதாவது நான் உதவியாளராக இருந்தபோது நானேதான் பின்னணி இசையை அமைப்பேன். எனவே எனக்கு யாரையும் உதவியாளராக வைத்துக்கொள்ளக்கூடாது. அனைத்தையும் நாமே செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். நம்முடைய இசை கேவலமாக இருக்கிறது என்று துப்பினாலும் அந்த விமர்சனம் நம்மிடமே வரட்டும்; நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாலும் நம்மிடமே வரட்டும். எனவே யாரையும் உதவியாளராக வைத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
சிம்பொனி இசை: என் இனிய பொன் நிலாவே, நினைவோ ஒரு பறவை, மடை திறந்து பாடும் நதியலை நான் ஆகிய பாடல்களில் நான் சிம்பொனி இசையை பயன்படுத்தியிருக்கிறேன். இந்த இசையை இந்தப் பாடல்களில் கொடுத்து சிம்பொனிக்கு மக்களை பழக்கப்படுத்தியிருக்கிறேன்" என்றார். முன்னதாக சமீபத்தில்தான் இளையராஜா ஒரு சிம்பொனியை முடித்தார் என்பதும்; அதற்கு வெகுவான பாராட்டுக்கள் அவருக்கு குவிந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications