இவர் யாருக்கு சிம்மசொப்பனம்.. விஜய் அரசியலுக்கு வருகை.. ஜேம்ஸ் வசந்தன் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் இறங்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் முகநூல் பக்கத்தில், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தூண்டல், பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு வருவதுண்டு என்றும்,கோடியில் வருமானம் பார்க்கும் உச்சத்தில் உள்ள ஒரு நடிகர் தன் ஊறுவிளைவிக்கும் செயலில் அவ்வளவு எளிதாக இறங்கி விடுவாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய்யின் அரசியல் கட்சி பிப்ரவரி நான்காம் தேதி பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . முழு நேர அரசியல்வாதியாக மாற முடிவு செய்துள்ள விஜய், தனது கட்சியில் படித்த பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க உள்ளார். ஊழல் குற்றச்சாட்டுடன் மற்ற கட்சியில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு தன் கட்சியில் இடமில்லை என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகனுக்கு என்ன தெரியும்: இந்நிலையில்,விஜய்யின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார் என்று. வழக்கமான நடிகனுக்கு என்ன தெரியும் அரசியலைப் பற்றி? விமர்சனங்கள் வலம்வரத் தொடங்கி விட்டன.
யாரும் தடுக்க முடியாது: மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற தூண்டல் பல்வேறு துறைகளில் இருக்கிற பலருக்கும் ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அது வந்துவிட்டது இவருக்கு. அவ்வளவுதான்! அந்தத் துளைப்பு வந்துவிட்ட இவருக்கு. இனி யாரும் தடுக்க முடியாது. நூறுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறுவிளைவிக்கக்கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா?
யுக்ரெய்ன் அதிபர் செலன்ஸ்கி: எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்? அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால் அந்த உந்துதல் இவருக்கு இது என் புரிதல். வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாகக் கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான யுக்ரெய்ன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர்தானே!
நோக்கம் சரியாக இருந்தால்: நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே, புட்டினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே, நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்' என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











