ரீல்ஸ் வீடியோ போடுவது ஒரு திறமையா? இது உண்மையான திறமை இல்லை.. ஜேம்ஸ் வசந்தன் காட்டமான பதிவு!
சென்னை: செய்தி வாசிப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். ரீல்ஸ் வீடியோ போடுவதில் ஒரு திறமையும் இல்லை என்று ஜேம்ஸ் வசந்தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். இசை குறித்து அவ்வப்போது பல பதிவுகளையும் வெளியிட்டு வரும் இவர், இசையமைப்பாளர்களின் இசை குறித்து தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதே போல, அண்மையில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனது குறித்த தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

ஜேம்ஸ் வசந்தன்: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது ட்ரெண்டாக உள்ள விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நடிப்புத் திறமையைக் காட்ட காணொலிகளை அனுப்பச் சொன்னால் இப்போது எல்லாரும் அனுப்புவது ஏற்கனவே இருக்கிற படக்காட்சிகளின் ஒலியை வைத்துக்கொண்டு அதற்கு உதட்டசைவு கொடுப்பது. சமூக ஊடகங்களில் உங்கள் முகத்தைப் பிரபலப்படுத்திக்கொள்ள இப்படியெல்லாம் செய்வது ஒன்றும் பிரச்சனையில்லை. இது எப்படி உங்கள் நடிப்புத்திறமையை ஒரு இயக்குனருக்குக் காட்டும்? அந்தக் குரலும் அதிலுள்ள உணர்வுகளும், ஏற்ற இறக்கங்களும் யாருடையதோ. அதை எப்படி உங்கள் திறமையாகக் காட்டமுடியும்?
யாரிடமும் இப்படி வாய்ப்பு கேட்காதீங்க: எனக்கு மட்டுமல்ல, இனி யாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு காணொலிகளை அனுப்பினாலும் இவைகளை அனுப்பாதீர்கள். வேண்டுமானால், ஒரு காட்சியை எடுத்து அந்த வசனங்களை உங்கள் பாணியில் பேசி நடித்துப் பதிவுசெய்து அனுப்புங்கள். நீங்களே உங்கள் வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால், யாரிடமாவது புதிதாக ஒரு காட்சியைச் சொல்லச்சொல்லி அதற்கு வசனங்கள் எழுதி அதை நடித்து அனுப்புவதே சாலச்சிறந்தது, உங்களுக்கு உண்மையாகவே திறமை இருந்தால்; உங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் என்று ரீல்ஸ் வீடியோ போடுபவர்களையும், நடிகராக நினைப்பவரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











