விஜய் இதுல மாட்டிக்காம இருக்கனும்.. ஓட்டு போடறத பத்தி அப்பறம் யோசிக்கலாம்- ஜேம்ஸ் வசந்தன் பேச்சு!
சென்னை: நடிகர் விஜய் நேற்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இது இவருடைய 68வது படம். இதையடுத்து தனது 69வது படத்தில் நடித்து முடித்த பின்னர் முழு நேர அரசியலில் களமிறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டை உலுக்கி வரும் சம்பவமாக கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பான செய்திகள் மக்களை பீதி அடையச் செய்துள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்களும் திருநங்கைகளும் அடங்குவர். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட விஜய், அதே நாளில் நேரடியாக களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கட்சியினர் ஈடுபடவேண்டாம் எனவும், கள்ளக்குறிச்சிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தார். இதனால் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பெரிதாக ரசிகர்கள் எங்கும் ஈடுபடவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சிலர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தி கோட் அப்டேட்: அதேநேரத்தில் தி கோட் படத்தில் இருந்து படக்குழுவினர், படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடலையும் வெளியிட்டனர். இதில் சின்ன சின்ன கண்கள் பாடலை விஜய் பாடியுள்ளார். இவருடன் மறைந்த பாடகி பவதாரிணி பாடுவதைப் போலவும் ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜேம்ஸ் வசந்தன்: இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்த பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார். அதில், " நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வியப்பு அளிப்பதாகவும், சினிமாவில் இருந்து அவர் விலகுவது சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் அரசியல் களத்திற்கு வந்துள்ள விஜய், விமர்சனங்களையும் சொல்லடிகளையும் தாங்கும் மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விஜய் அரசியலில் தமிழ் இனத்திற்கு தேவைப்படுகின்ற மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு அவர்தான் சரியான பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். விஜய் ஒருபோதும் தனது எளிமையான இயல்பை மாற்றிக் கொள்ளவே கூடாது. மேலும் விஜய் தவறான ஆலோசகர்களை தனனைச் சுற்றி வைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நடிகராக விஜய்யை எனக்கு தெரியும், ஆனால் அரசியல் வாதியாக அவர் யார் என்று எனக்கு தெரியாது. தெரிந்த பின்னர், அவருக்கு வாக்கு செலுத்துவேனா இல்லையா என்பதை முடிவு செய்வேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











