அரசியல் களத்தில் விஜய்.. அச்சத்தில் திமுக அதிமுக! ஜேம்ஸ் வசந்தன் ஓபன் டாக்!
சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என பெயரில் விஜய் தொடங்கிய இந்த கட்சியின் நிர்வாகிகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்களே நியமிக்கப்பட்டனர். மேலும் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு, அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
அதாவது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என அறிவித்தார். இதனிடையே நடைபெற்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் கூறியிருந்தார். நேற்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய விஜய், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கட்சியினர் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டுருந்தார்.

களத்தில் விஜய்: இதற்கு முன்னதாக ஆளும் திமுக அரசைக் கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்ட விஜய், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க கள்ளக்குறிச்சிக்கே நேரடியாகச் சென்றார். இதுமட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் தெரிந்துகொண்டார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக இப்போதும் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.

சினிமாவுக்கு இழப்பு: இந்நிலையில், விஜய்யின் 50வது பிறந்த நாள் தொடர்பாக பல்வேறு ஊடகத்தினர், பல்வேறு திரைப்பிரபலங்களிடம் பேட்டிகளுக்கு இடையே கேள்வி எழுப்பினர். அதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பேட்டி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர், " நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வியப்பு அளிப்பதாகவும், சினிமாவில் இருந்து அவர் விலகுவது சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் அரசியல் களத்திற்கு வந்துள்ள விஜய், விமர்சனங்களையும் சொல்லடிகளையும் தாங்கும் மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும். விஜய் அரசியலில் தமிழ் இனத்திற்கு தேவைப்படுகின்ற மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

விஜய்க்கு ஓட்டு? ஆட்சிக்கு வருவதற்கு அவர்தான் சரியான பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். விஜய் ஒருபோதும் தனது எளிமையான இயல்பை மாற்றிக் கொள்ளவே கூடாது. மேலும் விஜய் தவறான ஆலோசகர்களை தனனைச் சுற்றி வைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நடிகராக விஜய்யை எனக்கு தெரியும், ஆனால் அரசியல் வாதியாக அவர் யார் என்று எனக்கு தெரியாது. தெரிந்த பின்னர், அவருக்கு வாக்கு செலுத்துவேனா இல்லையா என்பதை முடிவு செய்வேன்.

மக்கள் வெளிச்சம்: யாரோ ஒருவர் ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு புதிய கட்சி தொடங்குவதைப் போல் விஜய் கட்சி தொடங்கவில்லை. விஜய்க்கு இருக்ககூடிய மக்கள் வெளிச்சம் என்பது, அவர் கட்சி தொடங்கியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியது. ஒரு துறையில் இருக்கக்கூடிய ஒரு நபர் வேறொரு துறைக்கு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

அச்சத்தில் திமுக அதிமுக: விஜய்யின் அரசியல் வருகை என்பது ஏற்கனவே களத்தில் உள்ள மிகப்பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர், பாமக போன்ற கட்சிகளுக்கு சிறு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். இது இயல்புதான். அதற்கு காரணம் விஜய்யின் மக்கள் செல்வாக்குதான். விஜய் சினிமாத்துறையில் இருந்து வருகின்றார். அவருக்கு ஜாதி என்பது கிடையாது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என அவர் குறிப்பிடுவதும் அதைத்தான். ஆனால் ரசிகர்களுக்குள் ஜாதி இருக்கின்றது. இதனை விஜய் எப்படி கையாளப் போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என பொருள்படும்படி பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











