அயோத்தி படத்துக்காக எவ்வளவு பணம் வாங்குனீங்க - விமர்சித்தவருக்கு இசையமைப்பாளர் கொடுத்த பதிலடி
சென்னை: அயோத்தி படத்தை புகழ்வதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு ஈசன் படத்தை இயக்கிவர் தொடர்ந்து படங்கள் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அதன்படி பல படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

சசிக்குமார் நடித்திருக்கும் அயோத்தி படம்
அந்த வகையில் சசிக்குமார் சமீபத்தில் நடித்த படம் அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அயோத்தியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு குடும்பம் வரும்போது ஏற்படும் விபத்தில் தாய் இறந்துவிட அந்த குடும்பத்துக்கு இரண்டு பேர் உதவி செய்வதை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் படத்துக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

கதை சர்ச்சையில் சிக்கிய அயோத்தி
சூழல் இப்படி இருக்க அயோத்தி படத்தின் கதை யாருடையது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. படத்துக்கான கதை தன்னுடையது என எஸ்.ராமகிருஷ்ணன் கூற; படத்தின் கதை தன்னுடையது என மாதவராஜ் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய கதையிலிருந்தும் சிலவற்றை எடுத்திருக்கிறார்கள் எனவும், மூலக்கதை எழுதிய மாதவராஜுக்கு சேர வேண்டியதை கொடுக்க வேண்டும் எனவும் எழுத்தாளர் நரனும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதனை எஸ்.ராமகிருஷ்ணனும், படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தியும் தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.

படத்தை பாராட்டிய ஜேம்ஸ் வசந்தன்
இந்நிலையில் அயோத்தி படம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், "அயோத்தி' படம் பார்த்துவிட்டீர்களா, இல்லையா? இல்லையென்றால் பார்த்துவிடுங்கள்.
என்னென்னவோ மோசமான படங்களையெல்லாம் பார்த்து நேரத்தை வீணடித்திருக்கிற நாம், ஒரு இரண்டு மணி நேரத்தை உருப்படியாக செலவழிக்க வாய்ப்பு தருகிற படம்.
மலையாளப் படங்களைப் பாருங்கள், எப்படி வித்தியாசமான படங்களை எடுக்கிறார்கள் என்று சொல்லிச் சொல்லி ஆதங்கப்படுவதில்லையா? அதற்கு இணையாக வந்திருப்பதுதான் இந்தப் படம்.
ரொம்பப் பெரிதாக எதிர்பார்த்தெல்லாம் செல்லாதீர்கள். எளிமையான ஒரு கதையை தேவையற்ற மசாலாக்கள் எதுவும் இல்லாமல் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிற ஒரு நல்ல படம்.
படத்தைப் பற்றி எதுவும் யாரிடமும் கேட்காதீர்கள். போய்ப் பாருங்கள்.

வெட்கப்படாமல் அழுதுவிடுங்கள்
உணர்வுகளை அடக்கமுடியாமல் ஓரிரு காட்சிகளில் அழுகை வந்தால் வெட்கப்படாமல் அழுதுவிடுங்கள். அது உங்களுக்குள் இருக்கிற நற்குணத்தின் வெளிப்பாடுதான். நமக்குள் மனிதம் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதித்துக் கொள்ள வாய்ப்பு தந்திருக்கிற படம். கடந்த சில ஆண்டுகளில் சில சுயநலக் கயவர்களால் நாசமாய் போய்க்கொண்டிருக்கிற நல்ல மனித உணர்வுகளை நினைவுபடுத்தி மீண்டும் பழைய நிலைக்கு நம்மை உந்திச் செல்லக்கூடிய ஒரு படைப்பு. உணர்வு, அழுகை என்றவுடன் ஏதோ சோகப்படம் என்று நினைத்துவிடக் கூடாது. நமக்குள் இருக்கிற நல்லவைகளின் கொந்தளிப்புதான் அது. அவசியம் எல்லா இந்தியனும் பார்க்கவேண்டிய படம்" என குறிப்பிட்டிருந்தார்.

வம்பிழுத்த நெட்டிசன் பதிலடி கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்
இந்நிலையில் படத்தை பாராட்டிய ஜேம்ஸ் வசந்தனின் பதிவில் ரசிகர் ஒருவர், 'இந்த விளபர பதிவிற்கு எவ்வளவு பணம்' என கேள்விழ் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன், "நீ சேர்ந்திருக்கும் இடம் அப்படி. ஒற்றுமையை பற்றி பேசினால் உங்களுக்கு எரியுமே' என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிலடி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











