சங்கீத ஸ்வரங்கள் டூ நாட்டு நாட்டுவரை.. ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு பிறந்தநாள்
சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஆர்ஆர்ஆர். இதில் ராம்சரண், ஜூனியர் என் டிஆர் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் அடித்தது. மேலும் வசூல் ரீதியாகவும் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி ஆஸ்கர் விருதையும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார்.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த சினிமா குடும்பத்தில் பிறந்தவர் மரகதமணி கீரவாணி. இயக்குநர் ராஜமௌலிக்கு நெருங்கிய சொந்தம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர்கள் சக்கரவர்த்தி, ராஜாமணி ஆகியோரிடம் சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டவர் கீரவாணி. அதற்கு பிறகு 1990ஆம் ஆண்டு தனது 29ஆவது வயதில் நடிகரும், இயக்குநருமான மௌலி இயக்கத்தில் மனசு மமதா என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் கீரவாணிக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

பிரபலமான கீரவாணி: முதல் படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற அவருக்கு; தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி கிரிமினல், அல்லாரி பிரியுடு, க்ஷண க்ஷணம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பணியாற்றி வெகு பிரபலமானார். மேலும் கிரிமினல் படம் இந்தியில் எடுக்கப்பட்டபோது அதற்கும் இசையமைத்தார். இந்தியில் அவர் கரீம் என்று அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் செம க்ளாஸ்; தெலுங்கு, இந்தியில் அவர் அறிமுகமான பிறகு தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அழகன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் முதல் படமே கே.பாலசந்தர் படம் என்பதால் பெரும் பொறுப்போடு வேலை செய்தார் கீரவாணி. ஆனால் தமிழில் அவருக்கு மரகதமணி என்றே பெயரை வைத்தார் பாலசந்தர். அந்தப் படத்தில் இடம்பெற்ற சங்கீத ஸ்வரங்கள் ஏலே கணக்கா என்ற பாடல் இன்றுவரை க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதனையடுத்து வசந்த் இயக்கிய நீ பாதி நான் பாதி, பாலசந்தரின் ஜாதிமல்லி, வானமே எல்லை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து தனது தடத்தை கோலிவுட்டிலும் பதித்தார்.
இந்தியா முழுக்க பிரபலம்: பல மொழிகளில் பல வருடங்களாக அவர் பணியாற்றியிருந்தாலும் பாகுபலி படம்தான் அவரை இந்திய அளவில் அடையாளப்படுத்தியது. நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட படங்களில் அவரது இசை அட்டகாசமாக இருந்ததன் காரணமாக பலராலும் ரசிக்கப்பட்டார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்துக்கு தனது சிறந்த இசையை கொடுத்திருந்தார் கீரவாணி.
ஆஸ்கர்: முக்கியமாக அந்தப் பாடலுக்காக கோல்டன் குளோப், ஆஸ்கர் ஆகிய இரண்டு விருதுகளை பெற்றார் கீரவாணி. இதற்கு முன்னதாக ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இரண்டு ஆஸ்கர்களை அள்ளினார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அது வெளிநாட்டு பட பிரிவில் போட்டியிட்டு வென்றது. கீரவாணியோ இந்திய திரைப்படத்துக்காக ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார் அவர்.
இளையராஜா மீது மரியாதை: கீரவாணி ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளை வென்றாலும் இளையராஜா மீது தனி மரியாதை வைத்திருப்பவர். அதனால்தான் விருதுகளை வென்ற பிறகு நேராக சென்னையில் இருக்கும் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வந்து அவரிடம் வாழ்த்தினையும் ஆசீர்வாதத்தையும் பெற்று சென்றார். இன்று அவர் தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











