Sarpatta Parambarai 2: உருவாகும் சார்பட்டா பரம்பரை 2? சூசகமாக அறிவித்த சந்தோஷ் நாராயணன்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என இருவரும் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தங்களது திரை வாழ்க்கையைத் தொடங்கினர். இவர்களது நட்பு, இவர்களது வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. பா. ரஞ்சித் இயக்கிய படங்களுக்கு இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வியே தேவையில்லை. பா. ரஞ்சித் தனது படங்களில் இசை அமைக்க சந்தோஷ் நாராயணனைத்தான் தேர்வு செய்வார் என திரை உலகமே கூறிவிடும் அளவிற்கு இவர்களது திரைப்பயணம் இருந்தது.
இவர்கள் கூட்டணியில், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்ட பரம்பரை என மொத்தம் ஐந்து படங்கள் வெளியானது. ஐந்து படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றைக்கும் பலரால் பாராட்டைப் பெற்று வருகின்றது. ஆனால் இப்படி இருந்த இவர்கள் தனி இசைக் கலைஞர் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து உருவாக்கிய என்ஜாயி என்சாமி பாடல் மூலம் ஏற்பட்ட மனக்கசப்பில், பா. ரஞ்சித் தனியிசைக் கலைஞர் அறிவுக்கு ஆதரவாக நின்றார்.

இந்தப் பிரச்னையில் இருந்து இவர்கள் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கின்றது படத்திற்கு தென்மா இசை அமைத்தார். இவர் ஏற்கனவே ரஞ்சித் ஒருங்கிணைத்த கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் இசைக்குழுவின் தலைமை இசை அமைப்பாளராக இருந்தவர். இதையடுத்து தங்கலான் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்த படமும் இசைக்காக பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.
வாழை: இந்நிலையில் இன்று அதாவது அகஸ்ட் 23ஆம் தேதி, இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தினைப் பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேலும் படக்குழுவினரை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அதில், " திரையில் அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறாய் மாரி செல்வராஜ். உன் திரைமொழியில் நான் உருகிவிட்டேன். அத்துணை கலைஞர்களும் மிகச் சிறப்பாக இயங்கி இருக்கிறார்கள்! அனைவருக்கும் என் பேரன்பின் வாழ்த்துகள்! வாழை அற்புதம்" என பதிவிட்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரை 2: மேலும் இந்தப் பதிவில், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனையும் டேக் செய்திருந்தார். இந்த பதிவுக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தேங்ஸ் மாமே என பதில் அளித்தது மட்டும் இல்லாமல், சார்பட்டா பரம்பரை படத்தில் இருக்கும் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தின் கிஃப் ஃபைலை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த பலரும் வாழை படத்திற்காக வாழ்த்தியதற்கு மட்டும் இல்லாமல், சார்பட்டா படத்தின் 2ஆம் பாகத்திற்காகவும் சந்தோஷ் நாராயணன் நன்றி கூறியதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











