எந்த கர்வமும் இல்லை.. அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. விஜய் மகன் குறித்து இசையமைப்பாளர் சிலாகிப்பு
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. கண்டிப்பாக தனது தந்தை போல் சினிமாவில் தானும் பெரிய ரவுண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ஜேசன். இந்தச் சூழலில் அவர் குறித்து இசையமைப்பாளர் தமன் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். இதுவரை 68 படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது தனது 69ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார் அவர். சூழல் இப்படி இருக்க அவரது மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன், போக்கிரி உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தலை காண்பித்திருக்கிறார். எப்படியும் அவர் நடிகராவார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது.

ஜேசன் வைத்த ட்விஸ்ட்: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இயக்குநராகும் முடிவை எடுத்தார் அவர். இதற்காக கனடா சென்று அங்கு இயக்கம் சம்பந்தமான படிப்பை படித்தார். மேலும் ட்ரிக்கர் என்ற குறும்படத்தையும் அவர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் முதல் படம் இயக்குவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய்யின் மகன் இயக்குநர் ஆகிறாரா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
தேதி கொடுக்காத ஹீரோக்கள்: பட அறிவிப்பு வந்ததை அடுத்து பல ஹீரோக்களிடம் அவர் கதை சொல்லியதாக கூறப்பட்டது. ஜீவா, கவின் உள்ளிட்ட பலரிடமும் அவர் கதை சொன்னதாகவும்; ஆனால் அவர்கள் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. ஒருகட்டத்தில் இந்தப் படத்தை லைகா நிறுவனம் ட்ராப் செய்துவிட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவ ஆரம்பித்தன.
வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இப்படிப்பட்ட நிலைமையில் ஜேசன் சஞ்சய் தனது படத்தில் சந்தீப் கிஷனை ஹீரோவாக நடிக்க வைக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. படத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஜேசன் ஈர்ப்பார் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜேசன் குறித்து இசையமைப்பாளர் தமன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தமன் பேச்சு: ஜேசன் சஞ்சய் குறித்து பேசியிருக்கும் தமன், "ஜேசன் சஞ்சய்யை நினைத்து நான் இன்னமும் ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை. பொதுவாக பெரிய ஹீரோக்களின் மகன்கள் ஹீரோக்களாக ஆசைப்படுவார்கள். இசையமைப்பாளரின் மகன் இசையமைப்பாளர் ஆக ஆசைப்படுவார். ஆனால் இவர் எப்படி இயக்குநர் துறையை தேர்ந்தெடுத்து அதில் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறார் என்று தோன்றும். ஏனெனில் அவர் சொன்ன கதையை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்.
உறுதியாக இருந்தார்: ஜேசன் சஞ்சய் வைத்திருக்கும் கதைக்கு பெரிய ஹீரோக்களின் தேதிகள்கூட எளிதில் கிடைக்கும். ஆனால் சந்தீப் கிஷன் மட்டும்தான் இந்தக் கதைக்கு சரியாக வருவார் என்று உறுதியாக இருந்தார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் படக்குழு மொத்தமுமே தீர்க்கமாக இருக்கிறோம். விஜய்யின் மகன் என்ற கர்வம் துளிக்கூட ஜேசனிடம் இல்லை. அவ்வளவு எளிமையாக இருக்கிறார். விஜய்யின் மகன் என்பதை அவர் எங்கேயும் காட்டியதே இல்லை. அப்படத்துக்கு சிறப்பான இசையை கண்டிப்பாக கொடுப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











