Yuvan Shankar Raja: ஏ.ஆர். ரஹ்மானை விஞ்ச வேண்டும்! வைராக்கியத்தில் வளர்ந்த யுவன் சங்கர் ராஜாவின் கதை
சென்னை: யுவன் ட்ரக்ஸ், கிங் ஆஃப் பிஜிஎம் என இன்றைக்கும் கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது, 45வது பிறந்த நாளைக் (HBD Yuvan Shankar Raja) கொண்டாடுகின்றார். தனது இசையால் பலரையும் தனது, ரசிகர்கள் பட்டாளத்தில் கட்டுக் கொண்டுள்ளார். தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் இல்லாமல், இசையின் மொழி புரிந்த பலருக்கும் தனிமையில் துணையாக இருந்து அவர்களின் துயர் துடைப்பவராக இருக்கின்றார். இன்றைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாளில் அவர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இசைஞானி இளையராஜாவின் (Ilayaraaja) மகன் என்பதால் மட்டும் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கால் பதிக்கவில்லை. தனது திறமையால் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மேலும் ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) இசை அமைப்பாளராக அறிமுகமானது மட்டும் இல்லாமல், அன்றைக்கு உச்சத்தில் இருந்த இளையராஜாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார். இதனை அன்றைக்கு பதின்பருவத்து இளைஞனாக இருந்த யுவன் சங்கர் ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானை இசையில் விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில், இசை அமைப்பாளராக வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதன் முன்னர் வரை அவரது கனவாக இருந்தது, பைலட் ஆகவேண்டும் என்பதுதான். தனது தந்தையை ஒருவர் உலுக்கிவிட்டார். அவரை விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கனவை விட்டுவிட்டு, வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து, இசையமைப்பாளராக மாறியவர். தொடக்கத்தில் இவர் இசை அமைத்த படங்கள் பெரிதும் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான, பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் இல்லாமல், மாபெரும் ஹிட்டாக அமைந்தது.

தந்தைக்கு பெருமை: அன்னக்கிளி படத்தில் இளையராஜா அறிமுகமானபோது வானொலியில் எப்படி, அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தொடர்ந்து ஒலித்ததோ, அதேபோல், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல் என அனைவரும் கூற, தனது தந்தைக்கு பெருமை சேர்த்தார். அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட். இளையராஜாவுக்குப் பின்னர் ஏ.ஆர். ரஹ்மானிடம் தயாரிப்பாளர்கள் எப்படி வரிசை கட்டி நின்றார்களோ, அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் கம்போசிங்கிற்காக தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு இருந்தனர்.

தரமான இசை: தனது இசையால் தொடர்ந்து ஆல்பம் ஹிட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா, தமிழ் நாட்டில் பெருவாரியான திரையரங்குகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆடியோ சிஸ்டம் மேம்படுத்தப்பட்டதையடுத்து, அதற்கு ஏற்ற வகையிலும் இசையின் தன்மையையும் தரத்தையும் உயர்த்திக்கொண்டே போனார். குடும்ப உறவுகள், நட்பு வட்டாரம், காதல், காதல் பிரிவு, காதல் தோல்வி, மகிழ்ச்சி என மனித வாழ்வின் அடிப்படை உணர்வுகளை, இதயத்தில் இருந்து கொத்தாக உருவி இசையாக தொடுத்துக் கொண்டு வருகின்றார்.
பி.ஜி.எம். கிங்: பாடல்களில் மெகா ஹிட் கொடுக்கின்றார் என்றால், படத்தின் பின்னனி இசையில் இவரை நெருங்க இதுவரை ஆட்கள் இல்லை எனக் கூறும் அளவிற்கு அமைத்துள்ளார். தான் வளரும் காலத்திலும் சரி, வளர்ந்த பின்னரும் சரி, சிறிய பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என்ற எண்ணத்தையெல்லாம் மனதில் கொள்ளாமல், தனது மனத்திற்கு கதை பிடித்தால் மிகவும் கூலாக இசை அமைக்க ஒத்துக் கொண்டு, இசை அமைத்துக் கொடுத்து வருகின்றார். இதுவரை கிட்டத்தட்ட 150 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

நா. முத்துக்குமார்: இவரும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் காலத்திற்கும் கொண்டாடப்படும். இணையத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல்கள் ரசிகர்களால் யுவன் சங்கர் ராஜா ட்ரக்ஸ் என இன்றைக்கு மட்டும் இல்லை என்றைக்கும் கொண்டாடப்படும் உயரத்திற்கு, தனது வைராக்கியத்தால் வளர்ந்து காட்டியுள்ளார். இவரது இசை வாழ்க்கையே பலருக்கு உத்வேகம் அளிக்கின்றது என்றால், அவரது இசை பலருக்கும் ஏதோ ஒரு வகையில் உத்வேகம் அளித்துக்கொண்டு உள்ளது. இப்படி இசையால் நம்மை மகிழ்விக்கும் யுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











