கசப்பான மற்றும் இனிப்பான தருணம்.. பவதாரணி வாய்சில் GOAT 2வது சிங்கிள்.. மனமுடைந்த யுவன் சங்கர் ராஜா!
சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவில் படத்தில் விஜய் பிறந்தநாள் சிறப்பு ஷாட்ஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 2வது சிங்கிளில் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி பாடியுள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரணியின் வாய்ஸை அப்படியே கொண்டு வந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் இதுபோன்ற ஒரு கசப்பான மற்றும் இனிப்பான தருணம் வரும் என்று தான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் மனமுடைந்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 2வது சிங்கிள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அரை மணி நேரம் முன்னதாகவே 5:30 மணியளவில் பாடலை வெளியிட்டு தயாரிப்பு தரப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொண்டாட்டங்களாக ரசிகர்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் கொடுத்துள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷாட்ஸ்சை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
கோட் 2வது சிங்கிள்: இதையடுத்து இன்று மாலை இந்த படத்தின் 2வது சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து யுவன் சங்கர் ராஜாவும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில் இன்றைய தினம் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் 2வது சிங்கிள் சின்ன சின்ன கண்கள் வெளியாகி உள்ளது.

பவதாரணி வாய்ஸ்: முதல் பாடலைப் போலவே இந்த பாடலையும் நடிகர் விஜய் பாடியுள்ளார். 2வது சிங்கிளில் அவருடன் சமீபத்தில் மறைந்த பிரபல பாடகியும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இணைந்துள்ளார். இந்த பாடலில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பவதாரணியின் வாய்சை பயன்படுத்தியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. முன்னதாக இந்த படத்தின் வேலைக்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்து தான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த பாடலை பவதாரணியை வைத்து பாட வைக்க வேண்டும் என்று தாங்கள் திட்டமிட்டதாகவும் அவர் உடல்நலம் தேறி வந்தவுடன் இந்த பாடலை பாட வைக்கலாம் என்று தாங்கள் நினைத்ததாகவும் யுவன் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்க பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
மனமுடைந்த யுவன் சங்கர் ராஜா: ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பவதாரணி உயிரிழந்ததாகவும் இதனால் தாங்கள் மனமுடைந்ததாகவும் யுவன் சங்கர் ராஜா அப்பதிவில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலை பவதாரணியின் வாய்ஸை வைத்தே உருவாக்க தாங்கள் திட்டமிட்டதாகவும் அதற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு நிலை ஏற்படும் என்று தான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் இது கசப்பான மற்றும் இனிப்பான தருணம் என்றும் அவர் மனம் உடைந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











