Muthu Re-Release: மிரட்டலாக ரீ-ரிலீஸானது முத்து... ரசிகர்களுடன் படம் பார்த்த மீனா, KS ரவிக்குமார்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தை மீனா, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இருவரும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரசிகர்களுடன் முத்து படம் பார்த்த மீனா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படம் 1995ம் ஆண்டு வெளியானது. ரஜினிகாந்த் - கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமான முத்து, சூப்பர் ஹிட் அடித்தது. முக்கியமாக இந்தப் படம் ஜப்பானில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ரஜினியுடன் மீனா, சரத்பாபு, ராதாரவி, விசித்ரா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தமிழ்நாட்டை போலவே ஜப்பானிலும் முத்து திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் வெளியான ரஜினி படங்களை பார்க்க ஜப்பானில் இருந்து ரசிகர்கள் சென்னை வரும் அளவிற்கு முத்து விஸ்வரூப வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற தில்லானா தில்லானா பாடலுக்கு ரஜினி ஆடிய ஆட்டத்தை பார்த்து, அவருக்கு டான்ஸிங் மகாராஜா என டைட்டில் கொடுத்தனர் ஜப்பான் ரசிகர்கள்.
அதேபோல், ஏஆர் ரஹ்மானின் இசையில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்தது. இந்நிலையில், முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி மீண்டும் ரிலீஸாகியுள்ளது. 4கே டெக்னாலஜியில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு இன்று ரீ-ரிலீஸானது முத்து. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஏஆர் ரஹ்மான், "ரஜினிகாந்த் சாருடன் என் முதல் படமான முத்து இன்று 4கே தொழில்நுட்பத்தில் 5.1 சவுண்ட் உடன் வெளியாவதை அறிந்து சந்தோஷப்படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று ரீ-ரிலீஸான முத்து படத்தை மீனா, கேஎஸ் ரவிக்குமார் இருவரும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துப் பார்த்தனர். இந்த புகைப்படங்களை கவிதாலயா நிறுவனம் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதேபோல் ரீ-ரிலீஸான முத்து படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு முத்து திரைப்படம் ரீ-ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











