»   »  வீரப்பன் 'டிவி சீரியலை' எதிர்த்து முத்துலட்சுமி வழக்கு!!

வீரப்பன் 'டிவி சீரியலை' எதிர்த்து முத்துலட்சுமி வழக்கு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil


சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை மக்கள் டிவியில் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளார்.

Click here for more images

மக்கள் டிவியில், சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு டிவி தொடராக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி வழக்கு போட்டார். இதை ஏற்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து மக்கள் டிவியில் வருகிற 15ம் தேதி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்று தொடரின் இயக்குநர் கெளதமன் கூறியுள்ளார். முத்துலட்சுமியின் ஒத்துழைப்புடன் இடைக்காலத் தடை நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய முத்துலட்சுமி திட்டமிட்டுள்ளார். இத்தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் பேட்டி அளித்தார். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியபடி பெரும் சோகத்துடன் பேசினார் முத்துலட்சுமி.

அவர் கூறுகையில், எனது இரு மகள்களின் நலன் கருதி இந்தத் தொடரை ஒளிபரப்ப வேண்டாம் என்று மக்கள் டிவி நிர்வாகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் பத்தாவது மற்றும் 11ம் வகுப்பு படித்துக் கொண்டுள்ளனர். இந்தத் தொடரால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.

எனது கணவரை மோசமான நபராக இந்த தொடரில் சித்தரித்துள்ளனர். இதனால் எனது மகள்களை, அவர்களுடன் படிக்கும் சக மாணவிகள் கேலி செய்யும் நிலை ஏற்படும். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

தொடரின் இயக்குநர் கெளதமன், பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுடன் வந்து என்னிடம் இந்த்த தொடரை இயக்க அனுமதி கோரினார். அதற்கு நான் எனது இரு மகள்களின் படிப்பும் முடிந்த பிறகு தருவதாக கூறியிருந்தேன்.

ஆனால் நான் வீரப்பன் குறித்து அவரிடம் பேசியதை எனக்கே தெரியாமல், ரகசியமாக மைக்ரோபோன் மூலம் பதிவு செய்து என்னை மோசடி செய்து விட்டார் கெளதமன்.

எனது மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நான் எழுதி வந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூலைக் கூட பாதியில் நிறுத்தி வைத்துள்ளேன். அந்த புத்தகம் தற்போது 650 பக்கங்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஆனாலும் எனது மகள்களின் நலன்தான் முக்கியம் என்பதால் நூல் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

வீரப்பன் குடும்பத்தினர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு வீரப்பன் தரப்பில் சாட்சியாக இந்த நூல் விளங்கும். எனது வக்கீலின் ஆலோசனையின்பேரில்தான் தற்போது எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன்.

என்னிடம் பேசிய கெளதமன் எனக்கு வீரப்பனை நன்றாகப் பிடிக்கும் என்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். அப்போது என்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் பற்றி அக்கறையுடன் கேட்டார். நான் அவரை நம்பி பல விஷயங்களை சொன்னேன்.

அவற்றை அவர் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த மைக்ரோபோன் மூலம் பதிவு செய்துள்ளார். அதை வைத்து இப்போது தொடரை தயாரித்துள்ளனர்.

எனது கணவர் 30 ஆண்டுகள் காட்டிலேயே வனவாசமாக இருந்தார். அவரை போலீசார் கொன்ற பிறகும் என்னை நிம்மதியாக இருக்க விட வில்லை. எனது மகள்கள் இருவரும் சென்னையில் தங்கி படிக்கிறார்கள். அவர்கள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாக்களில் கூட என்னை அனுமதிப்பதில்லை.

இதனால் என் பிள்ளைகளுக்கு எல்லோரையும் போல் நம்மால் அம்மாவைப் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கத்துடன் உள்ளனர்.

என் மகள்கள் கல்லூரி அளவுக்கு உயர்ந்த பிறகு எங்கள் ஒப்புதலுடன் வெளியிடுங்கள் என்று தான் நான் கூறி இருக்கிறேன்.

சந்தனக்காடு தொடரை எதிர்த்து இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன் என்றார் முத்துலட்சுமி.

Read more about: muthulakshmi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil