800 - வெங்கட் பிரபு தான் முதலில் இயக்குவதாக இருந்தது.. ஆனால் ஒரு பிரச்னை..மனம் திறந்த முத்தையா முரளிதரன்
சென்னை: Mutiah Muralitharan (முத்தையா முரளிதரன்) தனது வாழ்க்கை வரலாறான 800 படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குவதாக இருந்ததாகவும் ஆனால் ஒரு பிரச்னை வந்துவிட்டதாகவும் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன். தூஸ்ரா வகை பந்துகளை வீசும் அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் நடுங்கிய காலம் ஒன்று உண்டு. இந்தச் சூழலில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

எதிர்ப்பு: ஆனால் முத்தையா முரளிதரன் ஈழ தமிழராக இருந்தாலும் சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர். எனவே அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என எதிர்ப்பு எழுந்தது. தமிழர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் விஜய் சேதுபதி தமிழின விரோத போக்கில் செல்லக்கூடாது என்றும் பலர் கோரிக்கை வைத்தனர். பிரச்னை முற்றிப்போனதை அடுத்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார்.
மாதுர் மிட்டல்: இதனையடுத்து 800 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மாதுர் மிட்டல் நடித்தார். இவர் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகிமா நம்பியார், வேல ராமமூர்த்தி, நரேன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பு: இந்நிலையில் 800 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய முத்தையா முரளிதரன், "நான், வெங்கட் பிரபு, இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீபதி சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின்போது எனக்கு உதவி செய்த எனது நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, மாணவர்களை படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்துவருகிறோம்.
சிறு வயது நண்பர்கள்: வெங்கட் பிரபுவும் எனது மனைவியும் சிறிய வயதிலிருந்து நண்பர்கள். ஒருமுறை நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது என்னை பற்றி பயோபிக் எடுக்கலாம் என கூறினார். அதன் மூலம் வரும் பணத்தை ட்ரஸ்ட்டுக்கு கொடுத்துவிடலாம் என எனது மேனேஜர் கூறினார். அது எனக்கு சரி என்று பட்டது. முதலில் வெங்கட் பிரபுதான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை வந்ததால் விலகிவிட்டார்.
நான் சொன்னேன்: அதன் பிறகு படத்தை நீங்கள் இயக்குங்கள் என்று ஸ்ரீபதியிடம் கூறினேன். பிறகு விஜய் சேதுபதி படத்துக்குள் வந்தார். அதிலும் பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னைகள், கொரோனா என அனைத்தையும் தாண்டி படத்தை முடித்த ஸ்ரீபதிக்கும் படக்குழுவுக்கும் நன்றி. நாங்கள் மலையக தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தில் பல தடைகள் இருந்தன. படத்துக்கும் அப்படியான தடைகள் வந்தன. அனைத்தும் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனை ஸ்க்ரிப்ட்டில் ஸ்ரீபதி அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











