அது நானே, அட்மின் இல்லை: காஷ்மீர் வரை பரவிய ஹெச். ராஜா டிரெண்ட்
ஸ்ரீநகர்: திரையுலகை விட்டு விலகுவதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டது என் அட்மின் இல்லை, நான் தான் என்று நடிகை ஜாய்ரா வாசிம் தெரிவித்துள்ளார்.
ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் மூலம் நடிகையானவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஜாய்ரா வாசிம். நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

ஈமான், அல்லாஹ், மதத்துடனான உறவு பாதிக்கப்படுவதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக 18 வயதே ஆன ஜாய்ரா வாசிம் தெரிவித்துள்ளார். ஆனால் இது அவராக எடுத்த முடிவாக இருக்காது என்று மூத்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.
ஜாய்ராவின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்களோ வீட்டில் கட்டாயப்படுத்தி திரையுலகை விட்டு விலக வைத்துள்ளனர். மதத்தின் பெயரால் இப்படி செய்வது நியாயம் இல்லை என்கின்றனர். சிலரோ, ஜாய்ராவின் ஃபேஸ்புக் பக்கத்தை யாராவது ஹேக் செய்திருப்பார்களோ, இல்லை என்றால் அட்மின் அந்த போஸ்ட்டை போட்டிருப்பாரோ என்று தெரிவித்தனர். எதையாவது போஸ்ட் செய்துவிட்டு அட்மின் மீது பிரபலங்கள் பழி போடுவதை பார்த்ததால் அப்படி ஒரு சந்தேகம்.
இதை எல்லாம் பார்த்த ஜாய்ரா கூறியிருப்பதாவது, திரையுலகை விட்டு விலகுவது என்பது நான் சுயமாக எடுத்த முடிவு. என் ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை. மேலும் என் சார்பில் அட்மின் அந்த போஸ்ட்டை போடவில்லை. நானே தான் போஸ்ட் செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிரபலங்கள் எதையாவது சமூக வலைதளங்களில் தெரிவித்துவிட்டு என் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் ஜாய்ரா விளக்கம் அளித்துள்ளார். ட்வீட் செய்தது நான் இல்லை அட்மின் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்த பிறகு அது ஒரு ட்ரெண்டாகிவிட்டது. அந்த டிரெண்ட் காஷ்மீர் வரை சென்றுள்ளது. அதனால் தான் போஸ்ட் போட்டது அட்மின் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார் ஜாய்ரா.
இதற்கிடையே ஜாய்ரா வாசிமின் முடிவை பார்த்த சுவாமி சக்ரபாணியோ, படங்களில் இனி நடிப்பது இல்லை என்கிற ஜாய்ராவின் முடிவை பாராட்டுகிறேன். இந்து நடிகைகள் அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பது என்று முடிவு செய்துள்ள ஜாய்ரா தான் நடித்து முடித்துள்ள தி ஸ்கை இஸ் பிங்க் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











