எங்களது தந்தை எப்படிப்பட்டவர் தெரியுமா?.. அஜித் சகோதரர் பகிர்ந்த உண்மை சம்பவம்
சென்னை: தங்களது தந்தை சுப்ரமணியம் குறித்து அஜித்தின் சகோதரர் அனில்குமார் பேசிய வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.
கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் சமீபத்தில் துணிவு படத்தில் நடித்தார். இதனையடுத்து அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

அஜித் தந்தை சுப்ரமணியம்
அஜித் தந்தை பெயர் சுப்ரமணியம். சுப்ரமணியம் பாலாக்காட்டில் பிறந்து வளர்ந்த தமிழர் ஆவார். அவரது தாய் மோகினி கராச்சியை பூர்வீகமாகக் கொண்டாலும் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியா வந்துவிட்டார். சுப்ரமணியமும், மோகினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனூப் குமார், அஜித்குமார், அனில்குமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் அனில்குமார் அஜித்தின் தம்பி ஆவார். இவர் தொழிலதிபராக இருந்துவருகிறார்.

அஜித் தந்தை மரணம்
அஜித்தின் தந்தை சுப்ரமணியம் பக்கவாத நோயால் கடந்த நான்கு வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தார். அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் இருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அடுத்து அவருக்கு பலரும் தங்களது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

தந்தை குறித்து அஜித் சகோதரர் அனில்குமார்
அஜித்குமாரின் தந்தை குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் யாரும் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப் போலவே அவரது குடும்பத்தினரும் மீடியா பக்கம் பெரும்பாலும் தலை வைக்காதவர்கள். சூழல் இப்படி இருக்க அஜித்தின் இளைய சகோதரர் அனில்குமார் தனது தந்தை குறித்து பேசியிருக்கும் விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

எங்களது தந்தை ஒரு போராளி போன்றவர்
சில மாதங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில், "அனைத்து க்ரெடிட்டுகளையும் எங்களது பெற்றோருக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களை ஸ்ட்ரிக்ட்டாக வளர்க்கவில்லை. நிறைய சுதந்திரம் கொடுத்தார்கள். எங்கள் அப்பா போராளி போன்றவர். அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. எந்த டிகிரியும் வாங்கவில்லை. ஆனால் அவர் பெரிய ஸ்மார்ட். இந்த வயதிலும் புது டெக்னாலஜி பயன்படுத்துவதிலும், இணையம் உபயோகப்படுத்துவதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

வேறு வேறு கலாசாரத்தை கொண்டவர்கள்
எங்களது தந்தையும், தாயும் வேறு வேறு கலாசாரத்தை உடையவர்கள். தந்தை தமிழர்.தாய் கராச்சியை சேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவிற்கு வந்துவிட்டார். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தந்தைக்கு அடிக்கடி பணி மாறுதல் நடக்கும். அதனால் கொல்கத்தாவிலிருந்து கான்பூர், லக்னோ, ஹைதராபாத் வந்தோம். அதன் பிறகு சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம்" என பேசியிருக்கிறார். அனில்குமாரின் இந்தப் பேட்டி இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











