பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது.. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி உருக்கம்!
சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்திற்காக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி.
Recommended Video
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதே பலரின் பிரார்த்தனையாக உள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என 18க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். இதனால் பல மொழி மக்களுக்கும் திரைத்துறையினருக்கும் பரிட்சயமானவராக உள்ளார்.

மீண்டு வரவேண்டும்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் மருத்துவமனையின் அறிக்கைகள் பலரையும் கவலையடைய செய்து வருகிறது. எஸ் பி பாலசுப்ரமணியம் மீண்டு வர வேண்டும் என பிரபலங்கள் பலரும் உருக்கமாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சிரஞ்சீவி உருக்கம்
அந்த வகையில் தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவியும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்களுக்கு இடையிலான உறவு குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார் சிரஞ்சீவி.

தேசத்தின் பெருமை
அவர் பேசியிருப்பதாவது, லட்சக் கணக்கானவர்களால் விரும்பப்படும் ஒரு பாடகர், அவர் இந்த தேசத்தின் பெருமை. எனது நண்பரும் சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறார். மேலும் சிகிச்சைக்கு நன்கு பதிலளிப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வீடியோ மூலம் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

நெருக்கமாக வாழ்ந்தோம்
மேலும் "பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள். சென்னையில், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக வாழ்ந்தோம், நாங்கள் அடிக்கடி சந்திப்போம். நான் அவரை என் சகோதரனாகவும், அவரது சகோதரிகள் என்னை தங்கள் சகோதரராகவும் கருதுகிறோம்.

மீண்டும் மயக்க வேண்டும்
நான் எஸ்பிபியின் உடல்நிலை பற்றி அவரது சகோதரிகள் மற்றும் அவரது மைத்துனர் மூலம் தெரிந்து கொள்கிறேன். அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார் என்பதை அறிந்து நான் மிகவும் நிம்மதியடைந்தேன்" என்றும் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். இந்த தேசத்தின் குரலான எஸ்பிபி, விரைவில் குணமடைய வேண்டும், மீண்டும் தனது குரலால் அனைவரையும் மயக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











