என்னோட அந்த ஆசை நிறைவேறிடுச்சு..' ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் நந்திதா ஸ்வேதா சொன்ன தகவல்!
சென்னை: சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறிவிட்டதாக நடிகை நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.
Recommended Video
சுசீந்திரன் இயக்கியுள்ள படம், ஈஸ்வரன். சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடித்துள்ளார்.
நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலசரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாடல் வெளியீடு
தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள தமிழன் பாட்டு, ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் பாடல் வெளியிட்டு விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது.

ரசிகர்கள் விழா
இதில், நடிகர் சிம்பு, பாரதிராஜா, படத்தின் இயக்குனர் சுசீந்திரன், நடிகைகள் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, முனீஷ்காந்த், பாலசரவணன், காளிவெங்கட் உட்பட படத்தில் நடித்தவர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட இந்த பாடல் வெளியீட்டு விழாவில், வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார் சிம்பு.

நான்கு சூப்பர் ஸ்டார்
விழாவில், நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது, சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறி விட்டதாகச் சொன்னார். அவர் பேசும்போது கூறியதாவது: நான் தமிழ் சினிமாவுக்கு வந்தப்ப, நான்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களோட நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். விஜய் கூட நடிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

பாருங்க, கொண்டாடுங்க
அது புலி படத்துல அது நிறைவேறிடுச்சு. அடுத்து ஆசைப்பட்டது சிம்பு படத்துல நடிக்கணும்ங்கறது. அது இந்தப் படத்துல நிறைவேறியிருக்கு. சிம்பு, சிறப்பான நடிகர். அடுத்து தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள்ல நடிக்கணும். இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. கண்டிப்பா சூப்பர் ஹிட்டாகும். படத்தை பாருங்க. கொண்டாடுங்க. இவ்வாறு கூறினார்.

ஆக்ஷன் காட்சி
நடிகை நந்திதா ஸ்வேதா, இப்போது ஐபிசி 376 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நந்திதா நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து கபடதாரி படத்திலும் நந்திதா நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











