உங்களை கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மிஷ்கின்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க பாட்டல் ராதா பட விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர். தொடர்ந்து அவர் இயக்கிய பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார்.
சர்ச்சை பேச்சு: மிஷ்கினை பொறுத்தவரை ஏதேனும் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவோ அதில் கலந்துகொண்டு பேசினால் சர்ச்சையோடுதான் கீழே இறங்குவார். அதுபோல்தான் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் விழாவிலும் சர்ச்சையாக பேசினார். அவரது பேச்சுக்கு நடிகர்கள் அருள்தாஸ் உள்ளிட்டோர் கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள்.
மன்னிப்பு கேட்ட மிஷ்கின்: இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் மிஷ்கின். பேர்ட் கேர்ள் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், "என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். வெற்றி கொடுத்த மிதப்பில்தான் அப்படி பேசியதாக பாடலாசிரியர் தாமரை கூறியிருக்கிறார். சினிமாவில் 18 வருடங்களாக நான் போராடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தாமரை, இயக்குநர் லெனின், நடிகர் அருள்தாஸ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோரிடம் நான் அந்தப் பேச்சுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.
நகைச்சுவைக்காக: அன்றைய தினம் நகைச்சுவைக்காக மட்டும்தான் அப்படி பேசினேன். இருட்டு அறையில் முரட்டு குத்து என்று பட பெயர் வைத்ததற்கு ஏன் அப்படி வைத்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லருடைய இறுதியில் வரும் கெட்ட வார்த்தையை யாரும் ஆபாசம் என்று சொல்லவில்லை. நான் பேசியது ஆபாசம் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்க என்றுமே நான் தயங்கமாட்டேன். உதிரிப்பூக்கள் படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு கேரக்டர், ஊர்க்காரர்களை பார்த்து உங்களை நான் கெட்டவனாக மாற்றிவிட்டேன் என சொல்லும். நண்பர்களே உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











