Mysskin: பேச்சுலதான் மிஷ்கின் அப்படி இப்படி.. நடிப்பு டிராகனா மாறி நிற்கும் மிஷ்கினுக்கு முத்தங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் பரபரப்புக்கு என்றைக்குமே பஞ்சம் இருந்தது கிடையாது. சில நேரங்களில் நல்ல விஷயத்திற்காக அந்த பரபரப்பு இருக்கும், சில நேரங்களில் சர்ச்சையான விஷயங்களுக்காக பரபரப்பாக இருப்பார்கள். இப்படி சில வாரங்களுக்கு முன்னர் மேடை ஒன்றில் பேசும்போது, சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பேசி, பெரும் சர்ச்சைக்குள் சிக்கியவர் மிஷ்கின். அதன் பின்னர் அடுத்த சில நாட்களிலேயே, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இப்படியான நிலையில் இவர், டிராகன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பு குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் டிராகன். விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தின் அத்தனை அம்சமும் பாராட்டுக்குரிய வகையில், இருப்பதால், மொத்த படக்குழுவினரையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதில் பலரும் பாராட்டுவது மிஷ்கினை தான். காரணம், இயக்குநர் மிஷ்கின் நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பல படங்களில் வில்லனாகத்தான் நடித்திருந்தார். வணங்கான் படத்தில் மட்டும் நீதிபதியாக நடித்திருந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சவரக்கத்தி படத்திற்கு முன்னர் மிஷ்கின் நடித்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம், படத்தின் மைய கதாபாத்திரம் என எது நடித்தாலும், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் எல்லாம், தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
நடிப்பு டிராகன்: அப்படியான கதாபாத்திரங்களை மிஷ்கின் மீண்டும் எப்போது தேர்வு செய்து நடிப்பார், அல்லது நிறைவான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை மிஷ்கின் எப்போது தேர்வு செய்து நடிப்பார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் இருந்தது. அப்படியான ரசிகர்களுக்கு ஸ்வீட் பாக்ஸாக அமைந்துள்ளது, டிராகன் படம். படத்தில் மொத்தம் மிஷ்கின் 15 முதல் 20 காட்சிகளுக்கு உள்ளாகத்தான் வருகிறார். மிடுக்கான பிரின்சிபல், கண்டிப்பான பிரின்சிபல் அதே நேரத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவராக உள்ளார். இதற்கு முன்னர் பல படங்களில் பிரின்ஸ்பல் கதாபாத்திரங்கள், ரசிகர்கள் மனதில் இருந்துள்ளது, குறிப்பாக நண்பன் படத்தில் வைரஸ், டான் படத்தில் பூமி ஆகியவை. ஆனால் டிராகன் படத்தில் வரும் மயில்வாகனன் கதாபாத்திரத்தை வேறு யாராலும் டச் செய்ய முடியாது எனக் கூறும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மிஷ்கின்: தனது கதாபாத்திரத்தில் எக்காரணம் கொண்டும் அவரது உண்மையான மேனரிசங்கள் வந்துவிடக் கூடாது என நூல் பிடித்ததை போல் நடித்துள்ளார். மிஷ்கினிடம் இது போன்ற நடிப்பை பார்த்து சகாப்தத்திற்கு மேல் ஆகிறது. கமர்ஷியல் படத்திலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்யலாம் என நிரூபித்துக் காட்டியுள்ளார் மிஷ்கின். இந்த கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என ரசிகர்களை சொல்ல வைத்துள்ளார். கமர்ஷியல் படம் தான் என நினைக்காமல், தனது கதாபாத்திரத்தை உண்மைக்கு நெருக்கமாக்கி உள்ளார்.
முத்தங்கள்: பிரதீப் ரங்கநாதன் குறித்து மாணவர்கள் மத்தியில் மேடையில் நின்று கொண்டு பேசும் காட்சி, காருக்குள் இருந்து கொண்டு முறைத்துப் பார்க்கும் காட்சி, தனது காலில் விழுந்து பிரதீப் ரங்கநாதன் கெஞ்சும் காட்சி, கிளைமாக்ஸில் பிரதீப் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கும் காட்சி என அனைத்து காட்சிகளிலும் செஞ்சுரி அடித்துள்ளார். நடிப்பில் டிராகனாக மாறி நிற்கும் ஷண்முக ராஜா எனும் மிஷ்கினுக்கு முத்தங்கள்.

மனதிடம்: தான் பேசியது சர்ச்சையான பின்னர், அது தொடர்பாக வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிக்க பேசினார். வழக்கமாக கண்ணாடி போட்டுக் கொண்டு பேசும் மிஷ்கின் அப்போது மட்டும் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு, தான் பேசியதைக் கேட்டு கைதட்டிச் சிரித்தவர்களே, தன்னை விமர்சித்தவர்களாக மாறிய போது, அவர்களை மிகவும் தைரியமாக எதிர்கொண்ட மனோதிடம் மிஷ்கினைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது. சினிமாகாரராக மட்டும் இல்லாமல், சக மனிதனாகவும் இந்த சமூகத்திற்கு பல விஷயங்களைச் சொல்லி வருகிறார். அந்த மிஷ்கினுக்கு வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











