பாலா அழுது அன்றுதான் பார்த்தேன்.. அவரை நேசிக்க வேண்டும்.. மிஷ்கின் உருக்கம்
சென்னை: இயக்குநர் பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும்; பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் மிஷ்கின் உருக்கமாக பேசினார்.
சேது படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அந்தப் படம்தான் விக்ரமுக்கு பெரும் அடையாளத்தை கொடுத்தது. கமர்ஷியலாக படம் ஆரம்பித்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் பலரையும் அழுக வைத்தது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இன்றுவரை அந்தப் படத்தை பலரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். நந்தாதான் சூர்யாவுக்கும் பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

முக்கியமான இயக்குநர்: முதல் இரண்டு படங்களிலேயே தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார் பாலா. தொடர்ந்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் ஆகிய இரண்டு படங்களுமே இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக இந்திய அளவில் முக்கியமான இயக்குநர் என்கிற பெயரையும் பாலா பெற்றுவிட்டார். ஆனால் நான் கடவுள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய பரதேசி, அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.
பிரச்னைகள்: இது ஒருபுறம் இருக்க பாலா தனது பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்தார். தனது மனைவி மலரை விவாகரத்து செய்த அவர் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். முழு படத்தையும் பார்த்த விக்ரமும், தயாரிப்பாளரும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இதன் காரணமாக தனது கரியர் வாழ்க்கையிலும் சறுக்கலை சந்தித்தார் அவர். அதேபோல் வணங்கான் படத்தை சூர்யாவ வைத்து ஆரம்பித்தார். அந்தப் படத்திலிருந்தும் சூர்யா விலகினார்.
வணங்கான்: இப்படி தொடர்ந்து சறுக்கிக்கொண்டிருந்த பாலா வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து ஆரம்பித்தார். படத்தின் வேலைகள் முடிந்து ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 நிகழ்ச்சியும், வணங்கான் ஆடியோ வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, மாரி செல்வராஜ், ஜிவி பிரகாஷ், மிஷ்கின், அருண் விஜய் என ஏகப்பட்டோர் கலந்துகொண்டார்கள்.
மிஷ்கின் பேச்சு: விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ""பாலா என்னும் கலைஞனை நாம் நேசிக்க வேண்டும். ராஜீன் மேனன் ஒரு ஸ்டூடியோவுக்கு போயிருக்கார். அங்கே 30 செருப்புகள் கிடந்திருக்கின்றன. அந்த செருப்புக்களுக்கு நடுவில் சோர்ந்து போய் ஒரு படுத்திருந்திருக்கார். அவர் யார் என்று ராஜீவ் மேனன் கேட்டிருக்கிறார். அந்த செருப்புகளுக்கு நடுவில் படுத்திருந்தவர்தான் சேது என்னும் படைப்பை நமக்கு கொடுத்த பாலா. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்துவிட்டு பாலா என்னை சந்திப்பதற்கு கூப்பிட்டார்.
அழுத பாலா: அந்தப் படம் சரியாக ஓடவில்லை. பாலா அழுது அதுவரை நான் பார்த்ததில்லை. அன்றைக்குத்தான் அவர் அழுது நான் பார்த்தேன். மேலும் என்னிடம் அவர் அன்று மது அருந்தலாமா என்று கேட்டார். பிறகு என்னுடைய தயாரிப்பில் படம் இயக்க தயாராக இருக்கிறாயா என்று கேட்டார். அந்தத் தருணத்தில் எனக்கு வாழ்க்கை கொடுத்த நபர் பாலாதான்""என்றார். முன்னதாக வணங்கான் திரைப்படத்திலும் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











