இளையராஜா முகத்திலே முழிக்காத அளவுக்கு சண்டை.. மிஷ்கின் மனசுல இவ்வளவு இருக்கா?
சென்னை: இயக்குநர், நடிகர் என கலக்கிக் கொண்டு இருக்கும் மிஷ்கின், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். பாடல்கள் என்றாலே உற்சாகமாகிவிடும் மிஷ்கின், இளையராஜா பாடல் என்றால் ஒரு குழந்தை போல மாறிவிடுகிறார். அப்படி இருக்கையில் இளையராஜா குறித்து அவர் பகிர்ந்து கொண்ட, இளையராஜா பாடல்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் சுவாரஸ்யமானவை.
இசைஞானி இளையராஜா குறித்து பேசும்போது எப்போதும், இளையராஜாவை அப்பா என்றுதான் கூறுவார். தனது படங்களுக்கு இசை இசைஞானி இளையராஜா தான் என்றால், இளையராஜா பெயரைத்தான் முதலில் இருக்கும்படி போடரை டிசைன் செய்வார். இப்படி இருக்கும்போது இசைஞானிக்கும் மிஷ்கினுக்கும் இடையில் மிகப்பெரிய சண்டையே வந்துள்ளது என்று சொன்னால், யாருமே நம்ப மாட்டார்கள். அதுவும் இனிமேல் இளையராஜா முகத்திலேயே இனிமேல் முழிக்க கூடாது என்று மிஷ்கின் முடிவு எடுக்கும் அளவுக்கு சண்டை நடைபெற்றதை மிஷ்கினே பகிர்ந்து கொண்டுள்ளார்.

மிஷ்கின் - இளையராஜா: இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனுடன் சூப்பர் சிங்கர் மேடையில் இருக்கும் போது, இளையராஜாவுடனான சண்டையை பகிர்ந்து கொண்டார். மிஷ்கின் பேசுகையில், " நான் இளையராஜா குறித்து அதிகம் பேசுவதால் என்னை விமர்சிப்பதைப் பார்க்கிறேன். இப்போது இங்கு உரிமையாக ஒன்று சொல்கிறேன். இளையராஜா முகத்தில் முழிக்கவே கூடாது என்று சண்டை போட்டுக் கொண்டு வந்தவன் நான். இந்த சண்டை நான் எனது அப்பாவுடன் சண்டை போட்டது போல.
வேண்டிக் கொண்டே இருப்பேன்: ஆனால் ஒரு இசைஞானிக்காக நான் எனது வாழ்நாள் முழுவதும் வேண்டிக் கொண்டே இருப்பேன். என் நாட்டில், என் வீட்டில், என் தாய் பெற்றெடுத்த அந்த மகா கலைஞனை, அந்த இறைவன் கொடுத்த அந்த பிச்சை எனக்கு மிகப்பெரிய பிச்சை. நான் அதனால்தான் நான் இசைஞானி குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் குறித்து பேசுவதால் எனது ஆன்மா சுத்தமடைகிறது" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் ரியாக்ஷன்: குறிப்பாக தோழர் ஆதி என்ற எக்ஸ் தள வாசி அவரது எக்ஸ் பக்கத்தில், " இனி பார்க்கவே கூடாதுனு சண்டை போட்டு பிரிஞ்சு வந்த பின்னாடி ஒருத்தரைப் பற்றி இவ்ளோ உள்ளப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக, நெகிழ்ந்து, கொண்டாடி பேச முடியுமா? இவ்ளோ காதலோட இருக்க முடியுமானு நான் எப்போதும் வியந்து பாக்கற கலைஞன், அது தான் மிஷ்கின்... அது தான் ராஜா" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு மேலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











