twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'என் வாழ்க்கையை ஓடவைத்த தியேட்டர்' சிறுவயதில் படம் பார்த்த திரையரங்கில் மிஷ்கின்.. திடீர் உருக்கம்!

    By
    |

    சென்னை: சிறுவயதில் தான் சென்று படம் பார்த்த தியேட்டரின் நிலை பற்றி தனது பேஸ்புக்கில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார், இயக்குனர் மிஷ்கின்

    இயக்குனர் மிஷ்கின், அடுத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.

    கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

    பழைய ஞாபகங்கள்

    பழைய ஞாபகங்கள்

    இந்நிலையில் திண்டுக்கல்லில் சிறுவயதில் சினிமா பார்த்த தியேட்டருக்கு சென்றுள்ளார், மிஷ்கின். அதுபற்றி தனது பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது: திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்குச் சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தன. என் ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். 'எப்படிப்பா இருக்கு?' என்று கேட்க, 'ரொம்ப நல்லாருக்குப்பா' என்று சொன்னேன்.

    இரண்டாவது முறையாக

    இரண்டாவது முறையாக

    என் தந்தை என் கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டாவது முறையாக என்னைப் படம் பார்க்க வைத்தார். அதுதான் என்னுடைய முதல் படம். அது புரூஸ் லீ நடித்த, ‘என்டர் தி டிராகன்' (Enter The Dragon). சிறுவனாய் பல திரைப்படங்களை இந்த என்.வி.ஜி.பி திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

    லொகேஷன் ஸ்கவுட்டிங்

    லொகேஷன் ஸ்கவுட்டிங்

    கால ஓட்டத்தில் பல ஊர்களுக்கு நகர்ந்து கடைசியாகச் சென்னை வந்து சேர்ந்து நகரவாசியாகி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள இடங்களில் என் அடுத்த திரைப்படத்திற்காக லொக்கேஷன் ஸ்கவுட்டிங் (Location Scouting) செய்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். திடீரென்று மனதில் ஓர் உதயம். காரை எடுத்துக்கொண்டு என்.வி.ஜி.பி தியேட்டருக்கு வந்தேன்.

    ஆலமரம் போல்

    ஆலமரம் போல்

    வாசலுக்கு வந்து அண்ணாந்து பார்த்தால் பெரும் ஆலமரம் போல் அந்த தியேட்டர் நின்று கொண்டிருந்தது. காவல்காரர், யாருய்யா நீங்க, என்ன வேணும்? என்று கேட்க. நான் இந்த தியேட்டர் ஓனரைப் பார்க்கணும் என்றேன். காவல்காரர் மாடிப்படி ஏறிச்சென்றார். ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான ஒரு மனிதர் படிக்கட்டில் இறங்கி வந்தார். என்னைப் பார்த்து என்ன வேணும் உங்களுக்கு? என்று கேட்டார்.

    தாழ்மையுடன் கேட்டேன்

    தாழ்மையுடன் கேட்டேன்

    'நான் கொஞ்சம் தியேட்டரைப் பார்க்கலாமா?' என்று தாழ்மையுடன் கேட்டேன். 'இங்க படம் ஏதும் ஓடலைய்யா' என்றார். ‘இது என் வாழ்க்கையையே ஓடவைத்த தியேட்டர் அய்யா' என்றேன். 'நீங்க யாரு? என்று கேட்டார். 'என் பேரு மிஷ்கின். நான் ஒரு திரைப்பட இயக்குநர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். 'என்ன படம்லாம் பண்ணியிருக்கீங்க?' என்று கேட்டார். என் அருகில் நின்ற உதவி இயக்குநர் என் எல்லாப் படங்களின் பெயரையும் பட்டியலிட்டார்.

    என்டர் தி டிராகன்

    என்டர் தி டிராகன்

    'நான் எந்தப் படமும் பாக்கலையே' என்று தியேட்டர் உரிமையாளர் என் ஆணவத்தின் தலையில் கொட்டினார். நான் சிரித்து, 'ஆமாய்யா. அதெல்லாம் சாதாரணப் படங்கள்தான். 'என்டர் தி டிராகன் மாதிரி ஒரு படம் இன்னும் பண்ணல' என்றேன். அவர் புன்னகை செய்து 'வாங்க தியேட்டர காட்டுறேன் என்று உள்ளே அழைத்துப் போனார். நான் உள்ளே ஐந்து வயதுச் சிறுவனாக நுழைந்தேன்.

    தூண்கள் அப்படியே

    தூண்கள் அப்படியே

    இருட்டில் ஆயிரத்துக்கும் மேல் இருந்த நாற்காலிகளைத் தடவிப் பார்த்தேன். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். பெரும் சத்தங்களுடன் அமைதியாக ஒரு திரைப்படம் ஓடியது. புரூஸ் லீ காற்றில் பறந்து கெட்டவர்களைத் தாக்கினார். அந்த தியேட்டருக்குள் நான் சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன.

    காலம் மாறிடுச்சு

    காலம் மாறிடுச்சு

    இரண்டு, மூன்று போட்டோக்களை என் உதவி இயக்குநர் எடுத்தார். நான் மீண்டும் தியேட்டருக்குள்ளிருந்து வெளியே வந்தேன். 'ஏன் தியேட்டர்ல படம் ஓட்டல' என்று உரிமையாளரிடம் கேட்டேன். 'காலம் மாறிடுச்சுய்யா. டிவி, நெட், பைரசின்னு எல்லாம் வந்துருச்சு. தியேட்டரை நம்பி முதலீடு போட முடியல. அதனாலதான் தியேட்டர்ல படம் ஓட்டுறதை நிப்பாட்டிட்டோம்யா' என்றார். நான் மௌனமாக நின்றேன்.

    வெளியே வந்தேன்

    வெளியே வந்தேன்

    வாங்க ஒரு காபி சாப்பிடலாம் என்று அந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அந்த காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது மனைவியிடம் 'நாலு காபி போட்டு குடும்மா' என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். என் நண்பர் ஸ்ரீகாந்தும், என் உதவி இயக்குநரும் அவரிடம் பேசிக்கொண்டிருக்க, நான் மௌனமாக அமர்ந்திருந்தேன். காபி வந்தது. குடித்துவிட்டு வெளியே வந்தேன்.

    உங்களுக்குத் தெரியுமா?

    உங்களுக்குத் தெரியுமா?

    நான்கு இளைஞர்கள் ஓடிவந்து, 'சார், செல்ஃபி எடுத்துக்கணும் சார்' என்றார்கள். தியேட்டரின் முதலாளி, அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார். 'ஓ இவரை உங்களுக்குத் தெரியுமா?' என்றார். அந்த இளைஞர்கள் 'இவர் படமெல்லாம் எங்களுக்குப் புடிக்கும் சார் என்றார்கள். 'நானும் என் மனைவியும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? என் குழந்தைகள் அமெரிக்காவில் இருக்காங்க. அவங்களுக்கு அனுப்புவேன்' என்றார்.

    Recommended Video

    Myskkin pisasu 2 எடுக்க 6 மாசம் கஷ்ட பட போரேன் • Pei Mama Audio launch
    என்ன பண்ணப்போறீங்க?

    என்ன பண்ணப்போறீங்க?

    'எடுத்துக்கோங்கய்யா' என்று அவர்கள் இருவருக்கும் அருகே நிற்க, அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ரொம்ப நன்றிய்யா என்று சொல்லி காரில் ஏறப்போய் திடீரென்று நின்று, திரும்பி அவரைப் பார்த்து, ‘படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டீங்க. இப்ப இந்த தியேட்டர என்னய்யா பண்ணப்போறீங்க? என்று கேட்டேன்.

    இன்னும் அங்கேயே

    இன்னும் அங்கேயே

    'அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்கப் போறோம்யா' என்று சொன்னார். நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி கதவைச் சாத்த, கார் கிளம்பியது. ஒரு இயக்குநராக அந்த தியேட்டரைக் கடந்து வந்துவிட்டேன். ஆனால், அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயதுச் சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றான்' இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.

    English summary
    Director Mysskin, who is presently scouting for locations near Dindigul for Pisasu 2, happened to revisit the theatre where he watched films as a child
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X