சினிமாவில் சாமிகள் கம்மி.. ஆனா என் சசி சாமிக்கு சாவே இல்ல.. நூறு சாமி பட விழாவில் மிஷ்கின் பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனித்துவமான திரைக்கதை பாணியைக் கொண்டுள்ள முன்னணி இயக்குனர் மிஷ்கின், பட விழாக்களில் பேசினாலே அது இணையத்தில் பரபரப்பாவது வழக்கம் தான். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 'நூறு சாமிகள்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு, தனது நெருங்கிய நண்பரும் பிரபல இயக்குனருமான சசி குறித்துப் பேசினார்.
என் சசி சாமி: விழா மேடையில் பேசிய மிஷ்கின், சினிமாவில் சாமிகள் கிடையாது, மிகவும் குறைவு தான். ஒரு பத்து பேர் தேறுவார்களா என்பது கூட சந்தேகம்தான். ஆனால், என் இந்த 30 வருட சினிமா வாழ்க்கையில் மாதத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்கிற, என்னை உற்றுப் பார்க்கிற, என்னை நேசிக்கிற, நான் இல்லாத இடத்தில் கூட என்னைப் பற்றி எப்போதும் அன்பாக, உயர்வாக, பெருமையாகப் பேசுகிற ஒரே சாமி, என் சசி சாமி தான். நாம் சினிமாவில் எவ்வளவோ சாதித்து நேஷனல் அவார்டு வாங்கலாம், ஃபிலிம்ஃபேர் விருதுகளை அள்ளலாம்... ஆனால் ஒரு நாள் நாம் இறந்துவிடுவோம். இந்த சசி என்ற மனிதன் இருக்கிறானே, அவன் சாகவே மாட்டான். அவன் ஒரு சாமி, என் அண்ணன் அவன். நான் ஆரம்பக் காலத்தில் இயக்குனர் கதிர் சாருடன் பணியாற்றும்போது அவ்வளவாக யாரிடமும் பேசமாட்டேன். ஆனால், அந்த விரக்தியான நேரத்தில் நான் முழுமையாக நம்பிய, நேசித்த ஒரே சாமி என் சசி சாமி தான் என்றார்.

டென்ஷன் ஆகிவிடும்: எனக்கு படம் பார்க்கும் பழக்கம் கிடையாது, பொதுவாக நான் அதிகமாகப் படங்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், நான் பார்க்கும் படம் நன்றாக இல்லை என்றால் எனக்குள் ஒரு டென்ஷன் வந்துவிடும். இதற்கு மேல் நம்மால் படமே எடுக்க முடியாது என்ற விரக்தி வந்துவிடும். அதே நேரத்தில் ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டால், அந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் அடுத்தடுத்து 25 படங்களுக்கு மேல் பண்ணலாம் என்கிற ஒரு அசாத்திய உத்வேகம் எனக்குள் பிறக்கும். அப்படித் தான் இந்த 'நூறு சாமி' படத்தைப் பார்த்த பிறகு எனக்குள் ஒரு மிகப்பெரிய உத்வேகம் வந்திருக்கிறது என்றார். ஜூன் 19ந் தேதி வெளியாக இருக்கும் நூறு சாமி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து, 'ஜெய் பீம்' புகழ் லிஜோ மோல் ஜோஸ், சுவாசிகா, அஜய் திஷான், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications