Mysskin - எனக்கு மாவீரனில் இதான் கேரக்டர்.. புட்டு புட்டு வைத்த மிஷ்கின்..விட்டா கதையையே சொல்லிடுவார்போல
சென்னை: Mysskin (மிஷ்கின்) மாவீரன் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டர் குறித்து இயக்குநர் மிஷ்கின் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பிரின்ஸ் படம் கொடுத்த மாபெரும் அடிக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டு பிரின்ஸ் அடைந்த தோல்வியை எஸ்கே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர்.
கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின்: மடோன் அஸ்வின் மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். யோகிபாபுவை வைத்து காமெடியுடன் சமூக அக்கறையுள்ள விஷயத்தை அந்தப் படத்தில் பேசி கவனம் ஈர்த்தார். அதுமட்டுமின்றி அப்படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். எனவே மடோன் அஸ்வின் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என பலர் கணித்திருக்கின்றனர்.

மாவீரனில் யார் யார்?: இப்படிப்பட்ட சுழலில்தான் மாவீரனை இயக்கியிருக்கிறார் அஸ்வின். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். மிஷ்கினுக்கான போர்ஷன் சமீபத்தில்தான் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து மிஷ்கின் ஓபனாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறேன். சிவகார்த்திகேயனுடன் கடுமையாக மோதும் வகையில் என் காட்சிகள் இருக்கும். முரட்டு வில்லனாக, வேஷ்டி, சட்டை அணிந்து வருகிறேன். அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், மடோன் அஸ்வின் படத்தை இயக்கி வருகிறார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் போகிறப்போக்கில் படத்தின் மொத்த கதையையும் சொல்லிவிடுவார் போல என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
புகழ்ந்த மிஷ்கின்: முன்னதாக அளித்த மற்றொரு பேட்டியில், " மாவீரன் படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்தப் படம் நிச்சயம் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் 'மாவீரன்' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் மிகவும் புத்திசாலி, அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு படங்களை இயக்குவார். யாராவது அவர் இயக்கிய ஷாட்டை மாற்ற சொன்னால் அவர் மாற்றமாட்டார். இயக்குநராக அவருடைய சொந்த கண்ணோட்டத்துடன்தான் படத்தை இயக்குகிறார்" என கூறியிருந்தார்.
மாவீரன் ரிலீஸ்: மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. எனவே மாவீரன் படத்தை ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை மாதம் 14 தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











