நாசர் காலில் விழுந்த மிஷ்கின்... ஆதங்கம், ஆக்ரோஷம்.. வெளியான வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவில் சினிமா பாணியை மாற்றியமைத்தவர், தனக்கென ஒரு ஸ்டைலில் காட்சிகளின் மூலம் மக்களை கண்ணீரில் ஆழ்த்தியவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் அனைத்தும் கொரியன் மொழியின் தழுவல் போன்று உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும், அதுபோன்ற படங்களை ஏன் தமிழ் ரசிகர்கள் பார்க்கக்கூடாது என கர்வத்தோடு பதில் அளிப்பார். தவறு செய்தாலும் ஆம் தவறு செய்தேன் மன்னித்து விடுங்கள் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டு காலில் விழவும் தயங்கமாட்டார். தற்போது, டிரெயின் படப்பிடிப்பின் போது நாசர் காலில் மிஷ்கின் விழும் காட்சி வெளியாகியுள்ளது.
மஞ்சள் புடவை: சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆனவர் மிஷ்கின். மிஷ்கின் படங்கள் என்றால் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டும் அந்த பாட்டிற்கு மஞ்சள் புடவை கட்டி ஒரு பெண் ஆடும் என்பதை சித்திரம் பேசுதடி படத்தில் இருந்தே டெம்பிளேட்டாக பாலோவ் செய்து வருகிறார். முகத்திற்கு வைக்கும் குளோஸ் அப் ஷாட்களை விட கால்களிலேயே கேமிரா கவிதை பேசும். நடிகர்களின் மெளனங்களை நேசிக்கும் இயக்குநராக இருக்கிறார்.

பிராந்திய மொழிகள்: தமிழ் சினிமா மீதும் இலக்கியத்தின் பெரும் காதல் கொண்ட மிஷ்கின், மாற்று மொழி படங்களில் உள்ள சமூக பிரச்னைகளை அலசி ஆராய்வார். மிஷ்கின் என்றால் ஜீனியஸ் என்றே சொல்லலாம். சித்திரம் பேசுதடி, முகமூடி, யுத்தம் செய், அஞ்சாதே போன்ற படங்கள் கல்ட் கிளாசிக் வகைகளை சார்ந்த படங்களாக இருக்கின்றன. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ போன்ற படங்கள் மெஹாஹிட் அடைந்தது.

இசை காதலன்: இளையராஜா மீது பெரும் காதல் கொண்டவர் மிஷ்கின். முகமூடி படத்தில் பாரில் வரும் பாட்டின் இடையே அன்னக்கிளி பாடலை வயலின் இசையால் இளையராஜா மீதான பேரன்பை வெளிப்படுத்தியிருப்பார். மிஷ்கின் நடித்த நந்தலாலா படத்தின் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்தார். அப்படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் கண்ணீரை வரவழைத்தன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ படங்கள் ரசிகர்கள் பெரிதும் ரசிக்கும் படங்களாகவே உள்ளன. இளையராஜா மீதுள்ள பேரன்பில் அப்பா என்றே அவர் அழைப்பார்.
அநாகரீக பேச்சு: இயக்குநர் மிஷ்கின் செல்லும் விழா மேடைகளில் அன்பை கொஞ்சம் கலோக்கியலாக கலந்து கெட்ட வார்த்தைகளை அதிகம் பிரோயோகிப்பார். ஆனால், அதை கேட்பவர்களுக்கு தான் சங்கடம். ஏன் இவரை விழாவிற்கு அழைத்தோம் என்ற மனசங்கடத்தை உருவாக்கி விடுவார். மிஷ்கின் பெயருக்கு பின்னால் சர்ச்சைகள் அதிகம். துப்பறிவாளன் 2 தொடங்கும் முன்னரே விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்னை. சமீபத்தில் பாட்டில் ராதா பட விழாவில் பேசியது பெரும் சர்ச்சையானது. திரை பிரபலங்கள் கொந்தளித்தனர். பின்பு, மிஷ்கினே பேசிய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

நாசர் காலில் விழுந்த மிஷ்கின்: விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்ற படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாசர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதனிடையே, நாசரின் பிறந்தநாளான இன்று மிஷ்கின் அவரது காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சிறந்த ஆசிரியர், நடிகர், இயக்குநர் நாசருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாசர் ஆக்ரோசமாக டப்பிங் பேசும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.


Click it and Unblock the Notifications











