For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்!

  By Shankar
  |

  -எஸ் ஷங்கர்

  தமிழ் சினிமாவில் வட மாவட்டத்துக் கலைஞர்கள் என்று பார்த்தால், வெகு சிலர்தான். ஆனால் அவர்களும் கூட பெரிய உயரங்களைத் தொட்டதில்லை. இத்தனைக்கும் முதல் தமிழ் சினிமாவை எடுத்தவரே வேலூர் நடராஜ முதலியார்தான். பின்னர் வந்தவர்களில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், ஈ ராமதாஸ், நாசர் என சிலர்தான் வெகுவாகத் தெரிந்தவர்கள். அவர்களுக்குப் பின் வந்தவர்தான் நா முத்துக்குமார். காஞ்சிபுரத்துக்காரர்.

  உதவி இயக்குநராக இருந்த முத்துக்குமாருக்கு முதல் பாடல் வாய்ப்பை தன் வீரநடை படத்தில் வழங்கியவர் இயக்குநர் சீமான். அதன் பிறகு கிரீடம், வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். பின்னர் முழுமையாக பாடலாசிரியராகிவிட்டார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நா முத்துக்குமாரின் பாடல்களைக் கேட்ட பிறகு அவரின் பரம ரசிகர்களாகிவிட்டார்கள் திரையிசைப் பிரியர்கள். தொடர்ந்து 12 ஆண்டுகள் அதிக பாடல்கள் எழுதியவர் என்ற முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டவர் நா முத்துக்குமார், அவர் மரணத்தைத் தழுவிய கடந்த 2016 வரை!

  Na Muthukumar's first death anniversary

  எளிமைக்கு இன்னொரு பெயராக ரஜினிகாந்தைத்தான் சொல்வார்கள் பலரும். அதில் நா முத்துக்குமாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் வேண்டும், இந்த வசதிகள் முக்கியம், இந்த இடத்தில் அமர்ந்தால்தான் பாட்டெழுத வரும் என்றெல்லாம் ஒரு நாளும் அவர் சொன்னதில்லை. ஒரு காரில் சில மைல் தூரம் பயணம் செய்தாலே போதும், பாட்டு வரிகள் வந்து விழும்.

  பணத்தை ஒரு பொருட்டாக அவர் மதித்ததே இல்லை. 'பணத்தை விட மனிதர்கள் முக்கியம், மொழி முக்கியம்' என்பது கவிஞர் அடிக்கடி சொல்லும் வாக்கு. வெளியூர், வெளிநாடு நிகழ்ச்சிகள் என்றால் தமிழ் மொழி சார்ந்ததாக இருந்தால் முன்னுரிமை தந்து தேதி தருவது அவர் வழக்கம்.

  சமீபத்தில் வெளியான தரமணி படத்தின் பாடல்கள் நா முத்துக்குமாரின் தமிழ் மேதைமைக்குச் சான்று. அவற்றைக் கேட்கும்போதெல்லாம், 'அடடா.. எப்பேர்ப்பட்ட பெருங்கவிஞனை இழந்துவிட்டோம்' என வருத்தம் மேலோங்குகிறது. ஒவ்வொரு பாடல் வரியும் அத்தனைப் புதிதாக இருந்தன. படம் பார்த்தவர்கள் வீட்டுக்குத் திரும்பியதும் நிச்சயம் அந்தப் பாடல்களை ஒருமுறையாவது போட்டுக் கேட்டிருப்பார்கள்.

  ஒரு பாடலின் வரிகளைப் பாருங்கள்...

  யாரோ
  உச்சிக்கிளை மேலே
  குடைப் பிடித்தாரோ, அது யாரோ

  பெரும் மழைக்காட்டை
  திறக்கும் தாழோ

  யாரும் இன்றி
  யாரும் இங்கு
  இல்லை...

  இந்த பூமி மேலே
  தன்னந்தனி உயிர்கள்
  எங்கும் இல்லை

  பேரன்பின் ஆதி ஊற்று
  தன தன்னே நன்னே நா நா
  அதைத் தொட்டுத் திறக்குது காற்று
  தன தன்னே நன்னே நா நா
  அட தரையில் வந்தது வானம்
  தன தன்னே நன்னே நா நா
  இனி நட்சத்திரங்களின் காலம்
  தன தன்னே நன்னே நா நா

  காட்டிலொரு குறுகுறு பறவை
  சிறு சிறு சிறகை அசைக்கிறதே
  காற்றில் அதன் நடனத்தின் ஓசை
  கைகளை நீட்டி அழைக்கிறதே
  காலம் அது திரும்பவும் திரும்புது
  கால்கள் முன்ஜென்மத்தில் நுழையுது
  பெண்ணே நீ அருகினில் வரவர
  காயங்கள் தொலைகிறதே...
  அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது
  நீ வந்தாயே
  உன் தோளில் நானும் சாயும்போது
  நீ என்தாயே

  தமிழ்க் கொலைகாரர்கள் மலிந்துவிட்ட தமிழ் சினிமாவில், திரையிசையில் இலக்கியம் படைக்க முயன்றவர் நா முத்துக்குமார். ஒரு மகா கவிஞனை இழந்து தவிக்கிறது தமிழ் சினிமா. முத்துக்குமார் மரணித்து ஓராண்டு கடந்துவிட்டாலும், அந்த பாதிப்பு இன்னும் அப்படியே இருக்கிறது.

  English summary
  Today August 14th is Poet Na Muthukumar's first death annivesary.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X