இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா? அப்பா பற்றி நா.முத்துக்குமார் மகன் கவிதை!
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் அப்பா பற்றி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார். தனது தனித்துவமான பாடல் வரிகளால் கவனம் பெற்ற அவர் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.
பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய அவர், சீமான் இயக்கிய 'வீரநடை' படம் மூலம் பாடலாசிரியர் ஆனார்.

7ஜி ரெயின்போ காலனி
காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி', கஜினி, நந்தா, காதல், சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி உட்பட பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். செல்வராகவன், விஜய், ராம், ராஜேஷ் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதி வந்தார். அவரது பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை.

தேசிய விருது
சுமார் 1500- க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தங்கமீன்கள் படத்தில் எழுதிய, ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காகவும் சைவம் படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்காகவும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக அவர் மரணமடைந்தார். அவருக்கு நேற்று 45-வது பிறந்த நாள்.

முத்துக்குமார் மகன் ஆதவன்
இதையடுத்து அவரது ரசிகர்கள், ட்விட்டரில் நேற்று டிரெண்டாக்கினர். அவரது பாடல்கள் குறித்தும் அவரது கவிதைகள் குறித்தும் அதில் ஏராளமான ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன், தனது தந்தை குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார். இந்தக் கவிதை சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. அந்த கவிதை இதுதான்:

இன்னும் கொஞ்சம் நாள்..!
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்!
என் தந்தையின் பாடல்கள் சொக்கத்தங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்!
என் தந்தையின் வரிகள் முத்து
அவர்தான் எங்களின் சொத்து!
என் தந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்!
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா!
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள்தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா?


Click it and Unblock the Notifications











