ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்..ரஜினிகாந்த் பட இசையமைப்பாளர் உயிரிழந்தார்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 71 ஆகும். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் எண்பதுகளில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்தவர் நடிகர் விஜய் ஆனந்த். இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் தனது இசையால் ஆட்சி செய்த காலத்தில், தனது தனித்துவமான இசையால், வெகுசில ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர், ரஜினி ஸ்ரீதேவி நடித்த நான் அடிமை இல்லை என்ற படத்திற்கு இசை அமைந்துள்ளார். இவரது இசையில் உருவான ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் இன்றைய இளம் ரசிகர்களுக்கும் பிடித்தமான பாடலாக உள்ளது.

இசையமைப்பாளர் விஜய் ஆனந்த்: இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபு, சீதா நடித்த வெற்றி மேல் வெற்றி படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடலும் ரசிக்கும் படி இருந்ததால், நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை, காவலன் அவன் கோவலன், ஊருக்கு உபதேசம், வாய்ச் சொல்லில் வீரரடி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
100க்கும் மேற்பட்ட படங்கள்: இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், தமிழ் மட்டுமில்லாமல், கன்னட உலகிலும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்தார். இவர் கன்னடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த Nee Bareda Kadambari படத்திற்கும் இசையமைத்தார். தமிழ், கன்னடம், இந்தி என படு பிஸியாக இருந்த விஜய் ஆனந்திற்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவில் இவரின் இசையை ரசிக்க முடியாமல் போனது.
இன்று இறுதிச்சடங்கு: இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71. அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உயிரிழந்துள்ளது. இசைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











