நாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்!
தனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'பேட்ட', வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்பட வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் படம்
இப்படமும் சர்கார் படம் போன்று அரசியல் பின்னணியைப் பேசும் படமாக இருக்கும், ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கூடவே, இப்படத்தின் தலைப்பு ‘நாற்காலி' எனவும், இப்படத்தில் ரஜினி தமிழக முதல்வராக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

நாற்காலி
இந்தத் தலைப்பை படக்குழு இதுவரை மறுக்காமல் இருந்தது. அதோடு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமலும் இருந்தது. இதனால் நாற்காலி தான் ரஜினி படம் என ரசிகர்கள் முடிவு செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

முருகதாஸ் மறுப்பு
இந்நிலையில், ‘தனது அடுத்த படத் தலைப்பு நாற்காலி இல்லை' என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடவே ‘இது போன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்' என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
இதன்மூலம் ரஜினி -முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படியானால் படத்தின் தலைப்பு வேறு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











