14 நாள் ஷுட்டிங், 18 டேக்குகள்.. ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் உருவான கதை தெரியுமா?
சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. அந்தப் பாடல் உருவான கதையை காணலாம்.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர் ஆர் ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவகன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டை பெற்ற படம் ஆர் ஆர் ஆர்

விருதுகளில் நாமினேஷன் ஆன ஆர் ஆர் ஆர் பாடல்
படம் எப்படி பரவலான வரவேற்பைப் பெற்றதோ அதேபோல் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் அதப் பாடல் மெகா ஹிட்டானது. பாடலின் ட்யூனும், அதற்கு அமைக்கப்பட்டிருந்த நடனமும் ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தின. இப்படி அனைவரையும் கவர்ந்த அந்தப் பாடல் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளில் நாமினேஷன் ஆனது.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு
ஏற்கனவே சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது நாட்டு நாட்டு பாடல். இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் அந்த விருதை பெற்றுக்கொண்டனர். சூழல் இப்படி இருக்க ஆஸ்கர் விருதிலும் அந்தப் பாடல் நாமினேஷன் ஆனது. அதன்படி இன்று நடந்த 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து பலரும் கீரவாணிக்கும், ஆர் ஆர் ஆர் படக்குழுவுக்கும் தங்களது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நாட்டு நாட்டு பாடல் உருவான கதை குறித்து காணலாம்.

நாட்டு நாட்டு பாடல் உருவான கதை
இந்தப் பாடல் உருவாவதற்கு முதல் காரணமே ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணின் நடனம்தான். ஆம், அவர்கள் இருவரது நடனமும் எப்போதும் பிரமிக்க வைக்கும். எனவே இருவரையும் ஒரே பாடலில் அதகளமாக ஆட வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ராஜமௌலிக்கு தோன்ற அதை தனது சகோதரரான இசையமைப்பாளரான கீரவாணியிடம் கூறினார். இதனையடுத்து பாடல் எழுத சந்திரபோஸை தேர்ந்தெடுத்து, "இருவரது நடனமும் மக்களை கவர வேண்டும் என்பதுதான் இதன் ஆன்மா. எனவே எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் இந்தக் கதை 1920களில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அக்காலக்கட்டத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் இருக்க வேண்டும்" என கூறினார்.

நாட்டு நாட்டு வார்த்தை உருவான தருணம்
இதனை கேட்டுவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த சந்திரபோஸுக்கு நீண்ட நேரம் ஆகியும் பாடலை எப்படி ஆரம்பிப்பது, எந்த வார்த்தையை பயன்படுத்துவது என தெரியாமல் இருந்திருக்கிறது. அதேசமயம் பாடலுக்கான ட்யூனும் அதுவரை அமைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் திடீரென நாட்டு நாட்டு என்ற வார்த்தை அவரது எண்ணத்தில் விழுந்தது. இசை எதுவும் அமைக்காததால் கீரவாணிக்கு எப்போதும் பிடித்த ஒரு கதியில் அந்த வார்த்தைகளை அவர் பின்ன தொடங்கிவிட்டார். இதனையடுத்து மூன்று வெர்ஷனை அவர் எழுதி கீரவாணியிடம் படித்துக்காண்பிக்கும்போது தனக்கு பிடித்த பத்தியை கடைசியாக சந்திரபோஸ் படித்து காண்பிக்க அது கீரவாணிக்கு பிடித்துவிட்டது. எனவே பாடல் ஏறத்தாழ முடிந்துவிட்டது.

முழு பாடலுக்கு 19 மாதங்கள்
ஆனால் பாடலில் ஆங்காங்கே சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் தோன்ற அது சந்திரபோஸுக்கும் சொல்லப்பட்டது. எனவே மீண்டும் இந்த பாடல் தொடர்பான விவாதத்தில் பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் தீவிரமாக இறங்கினர். அந்த விவாதத்தில்தான் தெலங்கானா, ஆந்திராவில் இருக்கும் வட்டார சொல்லாடல்கள், வாழ்வியல் முறை குறித்து வார்த்தைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சோளத்தை மிளகா தொக்குடன் தொட்டு சாப்பிடும் வழக்கத்தை குறிக்கும் விதமாக 'விரப்ப தொக்கு', தெலங்கானா, ஆந்திரா திருவிழாக்களில் முக்கிய கதாபாத்திரமான பெத்தராஜு போன்ற வார்த்தைகள் பாடலுக்குள் சேர்க்கப்பட்டதும் அந்தப் பாடல் மக்களுக்கான பாடலாக மாறிவிட்டது.

உக்ரைனில் படப்பிடிப்பு
இந்தப் பாடலானது உக்ரைனில் படமாக்கப்பட்டது. அப்போது திடீரென பாடலின் இறுதியை மாற்ற வேண்டும் என முடிவெடுத்த ராஜமௌலி கீரவாணியிடம் கூற இவர்கள் இருவரும் சந்திரபோஸை காணொலி வாயிலாக தொடர்புகொண்டு மாற்றித்தரும்படி கேட்டனர். அவரும் அதற்கு சலிக்காமல் வெறும் 15 நிமிடங்களில் பாடலின் இறுதிப்பகுதியை மாற்றிக்கொடுத்தார். அதன் பிறகு பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டு ஷூட்டிங் நடந்திருக்கிறது.

ரசிகர்களை மிரட்டிய நடனம்
பாடலின் ட்யூனும், வரிகளும் எப்படி அந்தப் பாடலுக்கு பலம் சேர்த்தனவோ அதேபோல் நடனமும் பெரும் பலம் சேர்த்தது. இதற்கான நடனத்தை நடன அமைப்பாளர் பிரேம் ரிஷித் இதற்காக 90க்கும் மேற்பட்ட நடன அசைவுகளை உருவாக்கினார். குறிப்பாக இருவரும் கைகோர்த்து ஆடும் நடன அசைவுக்கு 30க்கும் மேற்பட்ட நடன அசைவுகளை அமைத்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த நடனத்தை ஆடுவதற்கு மட்டும் கிட்டத்தட்ட 18 டேக்குகள் ஆகியிருக்கின்றன. காலை 8 மணிக்கே சென்று இரவு திரும்பி மீண்டும் இரவில் ரிகர்சல் எடுப்பது என 14 நாள்கள் இந்தப் பாட்டின் ஷூட்டிங் நடந்தது. இருவரும் கைகோர்த்து ஆடும் நடனம் 18 டேக்குகள் போனாலும் அதில் இரண்டாவது டேக்கை ஓகே செய்திருக்கிறார் ராஜமௌலி. இப்படி பல கஷ்டங்களை கடந்து படமாக்கப்பட்ட பாடல் இன்று ஆஸ்கர் வென்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











