நடிகர் சங்கத் தேர்தல்: 68 வேட்பு மனுக்கள் ஏற்பு- 3 மனுக்கள் தள்ளுபடி - வாபஸ் பெற 7ம் தேதி கடைசி நாள்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வேட்மனுக்களை திரும்பப்பெற வருகின்ற 7 ம் தேதி தான் கடைசி நாள் என்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் நடந்தது.
இதில் மொத்தம் 71 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாகவும், அவற்றில் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.
தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக பத்மநாபன் கூறியிருக்கிறார். அவர்கள் எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
இரு அணியிலும் முக்கியமானவர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதி உள்ளவர்கள் என்று பத்மநாபன் அறிவித்து இருக்கிறார்.
மேலும் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புபவர்கள் வருகிற 7-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 8-ந் தேதி வெளியிடப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 18 ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.


Click it and Unblock the Notifications











