விரைவில் நடிகர் சங்க தேர்தல்: இதிலும் விஷால் போட்டியிடுவாரா?
சென்னை: நடிகர் சங்க தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. அவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வேலை இன்னும் முடியாததால் தேர்தலை தள்ளிப் போட்டனர்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இருவரும் படப்பிடிப்புகளில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இன்றைய கூட்டத்தில் சங்க தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவரே விரைவில் அறிவிப்பார்.
நாங்கள் தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். நடிகர் சங்க கட்டிடப் பணி ஓராண்டுக்குள் முடிந்துவிடும். நடிகர் சங்க தேர்தல் வேலை நாளை முதல் துவங்குகிறது. இந்த தேர்தலில் விஷால் போட்டியிடுவாரா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது என்றார்.


Click it and Unblock the Notifications











