Nasser: FEFSI விதிமுறைகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.. நடிகர் சங்கத்தலைவர் நாசர் விளக்கம்!
ஐதராபாத்: தமிழ்ப்படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் பல நடிகர்கள், பிரபலங்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பவன் கல்யாணும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இவ்வாறு இருந்தால் வளர்ச்சியை காண முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

பெப்சி நெறிமுறைகள் குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் விளக்கம்: தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் எனப்படும் FEFSI அமைப்பின் சார்பில் பணியாற்றி வருகின்றனர். இந்த அமைப்பில் 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரபல இயக்குநர் ஆர்கே செல்வமணி செயல்பட்டு வருகிறார். தமிழ் திரையுலகின், தொலைக்காட்சி தொழில்துறையின் பல்வேறு துறைகளை சேர்ந்த 23 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இதன்கீழ் பணியாற்றி வருகின்றனர்.
பெப்சி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கும்வகையில், புதிய நெறிமுறைகளை இந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகில் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலையாளம் மற்றும் தெலுங்கு நடிகர்கள் ஆதிக்கம் தமிழில் அதிகமாக காணப்படுகிறது. அதிகமான பொருட்செலவில் வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் அதிகமான சூட்டிங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களை காக்கும்வகையில் அந்த அமைப்பு புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தமிழ் படங்களின் படப்பிடிப்புகளை தேவையின்றி வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் திரைப்படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நெறிமுறைகள் இந்திய அளவில் அதிகமான கண்டனங்களை பெற்றுள்ளது. மலையாள திரைப்பட தயாரிப்பாளர் விஜயன், தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் உள்ளிட்டவர்களும் இந்த புதிய நெறிமுறைகளுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்படங்களுக்கு கேரளா தடை போட்டால், தமிழ்த்திரையுலகம் குறைந்தபட்சம் 150 கோடி ரூபாய் வருவாயை இழக்கும் நிலை ஏற்படும் என்று விஜயன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பெப்சியின் புதிய நெறிமுறைகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். ஐதராபாத்திலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பான் இந்தியா படங்கள் அதிகமாக வெளியாகும் காலகட்டத்தில் நாம் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். பெப்சி ஊழியர்களை பாதுகாக்கும் வகையிலேயே புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழ் ப்ராஜெக்ட்களில் பெப்சி ஊழியர்களை அதிகமாக இணைக்கும்வகையிலேயே இந்த நெறிமுறைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட நெடுங்காலங்களாக தமிழ் சினிமா, இந்திய அளவில் அதிகமான பல மாநில ஊழியர்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதையும் நாசர் சுட்டிக் காட்டியுள்ளார். இதன்மூலம் பெப்சி ஊழியர்களுக்கு ஆண்டு முழுவதும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைப்பதை இந்த நெறிமுறைகள் உறுதி செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நெறிமுறைகள் குறித்து முன்னணி தமிழ் நடிகர்கள் யாரும் தங்களது கருத்துக்களை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











