விருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்
சென்னை:ஃபிலிம்பேர் விகுது விழாவை புறக்கணித்த நயன்தாரா, விஜய் சேதுபதி, கார்த்தி, குஷ்பு உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கடந்த காலங்களில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால் அந்தப் பயனை நடிகர், நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதார ரீதியாக பயன்பட்டாலும் பரவாயில்லை. இல்லை என்றால் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடை தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பின் நடந்த சில விழாக்களிலும் பணம் பெற்று நடிகர் சங்க அறக்கட்டளை செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் ஃபிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அவ்விழாவை நடத்துபவர்களிடம் எடுத்துக் கூறியும் ஒத்துழைப்பு தரவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகளிடம் தெரிவித்து அவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தோம். அதை ஏற்று அவ்விருது விழாவைத் தவிர்த்த நயன்தாரா, குஷ்பு சுந்தர், விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழைக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவ முடியும். இனி வரும் காலங்களில் இதை மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











