6000 ஆண்டுகள் நடக்கும் கதை.. கமல் நடிக்கும் படத்தில் இவ்வளவு விஷயமா?.. ரசிகர்கள் பிரமிப்பு
சென்னை: கமல் ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படு பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. விக்ரமின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல் ஹாசன் தொடர்ந்து சினிமாவில் பழையபடி கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்தியன் 2: அதன் விளைவாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கும் கமல்; ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி நடிகராக கமல் ஹாசன் படு பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தயாரிப்பு பணி: நடிகராக மட்டுமின்றி தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனி மூலம் படங்களையும் தயாரித்துவருகிறார் கமல். அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஆகியவைகள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன.
வில்லனாக கமல்: இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் வில்லனாகவும் கமிட்டாகியிருக்கிறார் கமல். இந்தப் படத்துக்காக 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னர் தெரியவந்தது. இந்தப் படத்தில் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி: பிரபாஸ் நடிக்கும் கல்கியில் கமல் ஹாசன் தவிர்த்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கவிருக்கிறது. முதலில் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் பெயர் அமெரிக்காவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் கல்கி 2898 Ad என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது.
நாக் அஸ்வின் பேட்டி: இந்நிலையில் கல்கி படம் குறித்து பேசியிருக்கும் இயக்குநர் நாக் அஸ்வின், "இந்தக் கதை மகாபாரத காலத்தில் ஆரம்பித்து கிபி 2898ல் முடியும். அதனால்தான் இப்படத்துக்கு கல்கி 2898 கிபி என்று பெயர் வந்தது. கிட்டத்தட்ட 6000 ஆண்டுகள் நடக்கும் கதையாக இது இருக்கும்" என்றார். முன்னதாக இப்படம் மொத்தம் ஒன்பது பாகங்களாக உருவாகும் என்ற உறுதிப்படுத்தப்படாத இன்னொரு தகவலும் ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











