பச்சோந்தி என்பதா? நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா? பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்!
ஐதராபாத்: பவன் கல்யாண் குறித்து விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜை கடுமையாக தாக்கியிருக்கிறார், அவர் சகோதரரும் நடிகருமான நாகபாபு.
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவின் தம்பி, பவன் கல்யாண். நடிகரான இவர், ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் ஜனசேனா கட்சி, கடுமையான தோல்வியை சந்தித்தது.

கடுமையாக விமர்சனம்
இப்போது அவர் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பவன் கல்யாணின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்தார். அவரை பச்சோந்தி என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முடிவுகள் மாறும்
இந்நிலையில், அந்தக் கட்சியின் உறுப்பினரும் பவன் கல்யாணின் சகோதரருமான நாகபாபு, பிரகாஷ்ராஜை கடுமையாக விளாசியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியலில் நேரத்துக்கு தகுந்தவாறு முடிவுகள் மாறும். அதன் நோக்கம் மக்களுக்குச் சேவை செய்வதுதான்.

அரசியல் அறிவு
பவன் கல்யாண், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குப் பெரிய காரணம் இருக்கும். ஆனால், தகுதியற்ற பலர் அவரை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் யாரையும் மோசடி செய்யவில்லை. பாஜக எம்பி, சுப்ரமணிய சுவாமியுடன் நடந்த விவாதத்தில், பிரகாஷ் ராஜின் அரசியல் அறிவு எல்லோருக்குமே புரிந்துவிட்டது.

பாராட்ட தெரியாது
பாஜக எடுக்கின்ற முடிவுகள் அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் விமர்சிக்கட்டும். அது சரிதான். ஆனால், அவருக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும். நல்ல விஷயங்களை பாராட்டுவது தெரியாது. பாஜக, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும். ஜனசேனா, ஆந்திராவை முன்னேற்றும்.

எவ்வளவு கஷ்டம்
பாஜக தலைவர்களை நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











