கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவியின் 'தண்டேல்' பட டிரைலர்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், '' ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது. இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும். நாக சைதன்யா - சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்கு தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும்.. அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும்.. இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை சாய் பல்லவி பேசுகையில், '' இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் கார்த்தி சார் - வெங்கட் பிரபு சார் - கார்த்திக் சுப்புராஜ் சார்- ஆகியோருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி.
தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது.
சக நடிகரான நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக வழங்கி, கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காக பணியாற்றிய ராக் ஸ்டார் டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தெலுங்கு திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவிட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
தண்டேல் படக் குழுவுடன் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை பார்க்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். '' என்றார்.
நடிகர் நாக சைதன்யா பேசுகையில், '' ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன்.

இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ' மெய்யழகன்' படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.
அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். சென்னைக்கு செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் என்று'. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.
இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தொழில் ரீதியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நீங்களும் இங்கு வருகை தந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹைதராபாத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்து கதை சொல்லி கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததற்கும் நன்றி.
கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடைய இயக்கத்தில் வெளியாகும் 'ரெட்ரோ' படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயக்குநர் சந்து என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்கு சென்று திரும்பவும் வருவது.. என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன்.
அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன். அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது.
இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றிக் கொண்டேன். இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாக்குளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.
தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்.
கருணாகரனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பு நன்றாக இருந்தது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தண்டேல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் '' என்றார்.


Click it and Unblock the Notifications











