Nagarjuna: இடிக்கப்பட்ட கட்டிடம் ஆக்கிரமிப்பு இல்லையாம்.. நாகர்ஜுனா கொடுத்த விளக்கத்த பாருங்க!
ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவுமே தற்போது பரபரப்பாக பேசி வரும் விஷங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது என்பதுதான். குறிப்பாக இந்த மண்டபம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தனக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக நாகர்ஜுனா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒரு அங்குலம் நிலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் இன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி இடித்துத் தள்ளினர். ஹைதராபாத்தில் உள்ள மாதாப்பூர் என்ற பகுதியில் தம்மிடி குந்தா என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் என் கன்வின்சன் என்ற பெயரில் அரங்கம் ஒன்றை நடிகர் நாகர்ஜுனா கட்டியிருந்தார். இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தில் சுமார் 3.5 ஏக்கர் தம்மிடி குந்தா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் இடிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து தம்மிடி குந்தா ஏரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் மனு அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்தனர். இதன்படி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும் இந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மூடினர்.

நாகர்ஜுனாதான் முதல்: ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த முகமை கடந்த ஜூலை மாதம்தான் தொடங்கப்பட்டது. இந்நிலையில், பெரும் நடிகர் நாக்ர்ஜுனாவிடம் இருந்து தனது மீட்புப் பணிகளைத் துவங்கியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என் கன்வென்ஷன்: நாகர்ஜுனாவின் என் கன்வென்ஷன் மண்டபமானது அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனுள் மொத்தம் மூன்று கல்யாண மண்டபங்களும் அதற்கு ஏற்ற பார்க்கிங் ஏரியாவும் இருந்தது. இந்த கட்டிடத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளும் நடந்துவந்துள்ளது. இவை அனைத்தும் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீட்டு விஷேசங்கள் நடைபெற்று வந்தது.

வேதனை: தனக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என நடிகர் நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதில், என் கன்வென்ஷன் கட்டிடம் முழுவதுமே எனது சொந்த நிலத்தில் கட்டப்பட்டது. அது எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் இடிக்கப்பட்டது வேதனை அளிக்கின்றது. அதில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் கிடையாது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பில் நான் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடம் கட்டியிருக்கின்றேன் என குறிப்பிட்டிருந்தால், நானே முன் நின்று கட்டிடத்தை இடித்திருப்பேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தக்க இழப்பீடு கோருவேன்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











