தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரைச் சந்தித்த நாகர்ஜுனா! மன்னிப்பு கேட்டாரா? ட்ரெண்டாகும் வீடியோ
மும்பை: நடிகர் நாகர்ஜுனாவை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தச் செயலுக்கு நடிகர் நாகர்ஜுனா மன்னிப்பும் தெரிவித்திருந்தார். மேலும் வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தெலுங்கு இயக்குநரும் தேதிச விருது பெற்ற இயக்குநருமான சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள கடந்த வாரத்தில் நடிகர் நாகர்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.

விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வந்த இருவரும் தங்களது கார் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்றனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள கடைகளில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் நடிகர் நாகர்ஜுனாவைப் பார்த்ததும் அவருக்கு கை கொடுக்க நாகர்ஜுனாவை நோக்கி வந்தார். மேலும் நாகர்ஜுனாவைத் தொட்டும் விட்டார். அப்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர்கள் அந்த மாற்றுத்திறனாளி ரசிகரை தள்ளிவிட்டனர். தான் தொடப்பட்டத்தை உணர்ந்த நாகர்ஜுனா பெரிதாக எதையும் வெளிக்காட்டாமல் நடந்து சென்று கொண்டே தன்னைத் தொட்டது யார் என பின்னாடி திரும்பிப் பாத்தார். இதை பின்னாலிருந்து வந்த நடிகர் தனுஷ் கண்டும் காணாமல் நடந்துவந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
நெட்டிசன்கள் கண்டனம்: இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், "குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லையா? ரசிகர்கள் இல்லாமல் நீங்கள் இந்த உச்சத்திற்கு சென்றிருக்க முடியுமா? தனுஷ் பார்த்தும் பாக்காததைப் போல் வந்துது ஏன்? தனுஷ் நாகர்ஜுனாவைக் கூப்பிட்டுச் சொல்லி இருக்கலாமே" என சமூக வலைதளங்களில் விமர்சித்து தள்ளினார். விஷயம் சமூக வலைதளங்கள் மட்டும் இல்லாமல் செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்தியாகவும் மாறியது. இதையடுத்து நடிகர் நாகர்ஜுனா சம்பந்தப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கேட்டார்.

மன்னிப்பு கோரிய நாகர்ஜுனா: தனது பாதுகாவலர்களால் மாற்றுத்திறனாளி ரசிகர் தள்ளிவிடப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த நாகர்ஜுனா, "இந்தச் சம்பவம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. இப்படி நடந்திருக்க கூடாது. நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற வருத்தம் ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்" என தெரிவித்திருந்தார்.
ரசிகரைச் சந்தித்த நாகர்ஜுனா: இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் 26ஆம் தேதி நடிகர் நாகர்ஜுனா, தனது பாதுகாவலர்களால் தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியதுடன், அன்று நடந்ததில் உங்களுடைய தவறு எதுவும் இல்லை என நாகர்ஜுனா ரசிகரிடம் கூறுகின்றார். அவருடன் நன்றாக பேசி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ரசிகர்கள் சிலர், மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் அழைத்து சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. இருந்தாலும் வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை பல இளைஞர்கள் வழிகாட்டியாக நினைத்து வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நல்ல வகையில் முன்னுதாரணமாக இருங்கள் என பொருள் படும்படி கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











