மகனின் இரண்டாவது திருமணம்.. சமந்தாவுக்காக புறக்கணித்தாரா நாக சைதன்யாவின் தாய்?.. வெளியான உண்மை
ஹைதராபாத்: நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் நடந்து முடிந்தது. பிரமாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் குடும்பத்தினரும், திரையுலகினரும் கலந்துகொண்டார்கள். அதேசமயம் அந்தத் திருமணத்தில் நாக சைதன்யாவின் தாயும், நாகார்ஜுனாவின் முதல் மனைவியுமான லட்சுமி கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் அதுகுறித்து உண்மை தற்போது தெரியவந்திருக்கிறது.
நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அவர் முதலில் லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. லட்சுமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார் நாகார்ஜுனா. அதனையடுத்து நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் அகில். நாக சைதன்யாவும் தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சமந்தாவுடன் காதல், பிரிவு: அவர் சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. மேலும் வீட்டு சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். ஆனால் திடீரென அவர்கள் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பினார்கள். இந்தச் சூழலில் சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலித்தார் சைதன்யா.

முடிந்த திருமணம்: நாக சைதன்யாவின் இந்தக் காதலுக்கும் அவரது வீட்டில் சம்மதம் கிடைத்தது. இதனையடுத்து ஹைதராபாத்தில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் முடிந்தது. பிறகு சில நாட்களுக்கு முன்பு அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினரும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இருவரும் திருமணத்துக்கு பிறகு ஸ்ரீசைலம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள். அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
முதல் மனைவிக்கு வருத்தமா?: இதற்கிடையே நாகார்ஜுனாவை பிரிந்த லட்சுமி இரண்டாவதாக சரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கிறார். அவர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ததை விரும்பவில்லை என்றும்; அதன் காரணமாக சோபிதாவுக்கும் - நாக சைதன்யாவுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தீயாக தகவல் பரவியது. அதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பும் ஏற்பட்டது.

வெளியான உண்மை: அதுமட்டுமின்றி சமந்தாவுக்காகத்தான் அவர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்று தீயாக வதந்தி பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று இப்போது உறுதியாகியிருக்கிறது. தன்னுடைய மகனின் திருமணத்துக்கு தனது கணவர் சரத்துடன் அவர் கலந்துகொண்டிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற வதந்தியை யார்தான் கிளப்புகிறார்களோ என்றும் நெட்டிசன்கள் கேட்டுவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











