HBD Nagesh - நாகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. கோலிவுட் மறக்க முடியாத மகா கலைஞன்.. எப்போதும் தாக்கம் இருக்கும்
சென்னை: Nagesh Birthday (நாகேஷ் பிறந்தநாள்) தமிழ் சினிமாவின் மகா கலைஞன் நாகேஷுக்கு இன்று 90ஆவது பிறந்தநாள்
தாராபுரத்தில் கடந்த 1933ஆம் ஆண்டு பிறந்தவர் நாகேஷ். பள்ளி படிப்பை அங்கேயே முடித்துவிட்டு நாடகத்தின் மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர் சென்னை தி.நகர் மேன்ஷனில் தங்கினார். அங்கிருந்தபடி நாடகத்தில் நடிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இவருடைய ரூம் மேட்டுகளில் ஒருவர் பாடலாசிரியர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வர் சுந்தரம்: தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அவர் மனமுள்ள மறுதாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது கே.பாலசந்தர் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம்.அந்தத் திரைப்படத்தில் நாகேஷின் உடல்மொழியும், நடிப்பும் வேறு தளத்தில் இருந்தன. இதனால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நாகேஷ்.
பிஸியான நடிகர்: சர்வர் சுந்தரம் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அதேபோல் அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. நாகேஷின் நடிப்பும் உச்சம் சென்றது.
1000 படங்கள்: நாகேஷ் கிட்டத்தட்ட 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ரோல், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடக்கூடியவர் நாகேஷ். இன்றுவரை யார் காமெடி செய்தாலும் அதில் நாகேஷின் உடல்மொழி கொஞ்சமேனும் வந்துவிடும். அந்த அளவு அவர் இந்த தமிழ் திரை உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார்.
நகைச்சுவையில் மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்குபவர் நாகேஷ். அதற்கு உதாரணமாக ரிதம் படத்தை சொல்லலாம். மீனாவிடம் ஒரு காட்சியில் கிழியுற அப்பளம் பார்த்துருக்கியா, தயிர் மும்பையிலிருந்து புனே வரைக்கும் புளிக்கும் என காமெடியாக பேசிவிட்டு என்ன பெரிய அப்பளம் தயிர் மகன் அவ்வளோ கஷ்டப்படுறான் என எமோஷன் ஸோனுக்குள் அவ்வளவு அசால்ட்டாக நுழைந்து பார்ப்பவர்களை சட்டென கலங்கடித்துவிடுவார். முக்கியமாக யாரையும் எளிதில் பாராட்டிவிடாத கே.பாலசந்தர் பலரிடம் நாகேஷ் போன்ற ஒரு மகா நடிகனை எங்குமே பார்க்க முடியாது என புகழ்ந்திருக்கிறார். இன்று அவருக்கு 90ஆவது பிறந்தநாள். இந்த சூழலில் அவர் குறித்த சில சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
பிழைப்புக்கு வழி: நாடகத்தில் நடிப்பதற்காக தி.நகர் மேன்ஷனில் தங்கியிருந்தபோது அவருக்கு வியட்நாம் வீடு சுந்தரமும் பழக்கம். ஒரு நாடகம் ட்ரூப்பில் சுந்தரத்தை காபி வாங்கி வர சொன்னார்களாம். இவரும் வாங்கி வந்திருக்கிறார். இதை கவனித்த நாகேஷ் சுந்தரத்தை கூப்பிட்டு காபி வாங்கிட்டு வரியே உனக்கு எவ்வளவு கமிஷன் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு சுந்தரம், 2 அணாவுக்கு வாங்கிட்டு வர சொன்னாங்க கமிஷன் எதுவும் இல்லை என்று சொன்னாராம். அதற்கு நாகேஷோ, 'யோவ் இப்படி இருந்தா எப்படியா பிழைப்ப.. 2 அணாவுக்கு வாங்கிட்டு வர சொன்னால் ஒரு அணாவுக்கு வாங்கிட்டு மிச்சத்துக்கு சுடு தண்ணி போட்டு கலக்கிடு. மீதி ஒரு அணாவை நீ எடுத்துக்கோ.. அப்போதான் பிழைக்க முடியும். ஏனா இங்க கமிஷன்லாம் தரமாட்டாங்க' என்றாராம்.
மீதி எங்கடா: அதேபோல் நாகேஷை பயன்படுத்தியவர்களில் கமல் ஹாசன் ரொம்பவே முக்கியமானவர். பாலசந்தர் நாகேஷ் குறித்து தன்னிடம் பேசும்போதெல்லாம் கோபமான கமல்; நாகேஷின் நடிப்பை நேரில் பார்த்து பிரமித்திருக்கிறார். அதனையடுத்து தன்னுடைய படங்களில் நாகேஷுக்கு ஒரு ரோலை ஒதுக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அப்படித்தான் அபூர்வ சகோதரர்கள் படம். அதில் வில்லனாக நடித்திருப்பார் நாகேஷ். ஒரு காட்சியில் அப்பு கமலை தூக்கிக்கொண்டு நாகேஷிடம் கொண்டுவரும்போது அவரை பார்த்து நாகேஷ், 'எங்கடா பாதிதான் இருக்கு மீதி எங்க' என்று கேட்டிருக்கிறார்.அந்த வசனத்தை கமலும், க்ரேஸி மோகனும் எழுதவே இல்லையாம். நாகேஷாக ஸ்பாட்டில் அடித்திருக்கிறார். இதனை பார்த்த கமல் ஹாசன் பிரமிப்பின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார். அதேபோல் அவர் நடித்த கடைசி படமும் கமலுடன் தான். அப்போது கமலிடம் நாகேஷ், 'நான் கடைசியாக நல்ல படத்தில் நடித்திருக்கேன்.. Iam Honour டா' என்றாராம். அவரது 90ஆவது பிறந்தநாளில் பெருமையோடு நாகேஷை நினைவுகூர்கிறது தமிழ் ஃபில்மிபீட்.


Click it and Unblock the Notifications











