For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மத்தவன் நடிகன்… நீ கலைஞன்..: நாகேஷிடம் அன்றே சொன்ன எம்.ஆர்.ராதா!

  |

  சென்னை: மறைந்த நடிகர் நாகேஷின் 85வது பிறந்தநாள் இன்று.

  நகைச்சுவையின் இலக்கணமாய் முப்பது ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் நாகேஷ். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என பல பாத்திரங்களை ஏற்றுள்ளார்.

  எம்ஜிஆரின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

  வறுமை

  வறுமை

  "எனக்கில்லை... எனக்கில்லை... அவன் வரமாட்டான் நம்பாதே..." என்று திருவிளையாடலில் தருமியாய் புலம்பிய வார்த்தைகள் நடிப்புக்காக வசனமாக பேசப்பட்டிருந்தாலும் நாகேஷின் ஆரம்ப கால வாழ்க்கை அப்படியே இருந்தது. வாய்ப்புக் கிடைக்காமல் கோடம்பாக்கம் வீதிகளில் வாலியும் நாகேஷும் சுற்றித் திரிந்த நாட்களில் பலநாட்கள் அவர்களுடைய உணவு பீடிதான். அதனால்தானோ என்னவோ ஆரம்பகாலங்களில் வயிற்றை நிரப்புவதற்காக தொடங்கிய புகைப்பழக்கத்தை அது நுரையீரலைத் துளைக்கும் வரையிலும் அவர் விடவே இல்லை.

  பாராட்டு

  பாராட்டு

  திருவிளையாடல் படத்தில் தருமியாக நாகேஷ் நடித்திருந்ததை பார்த்தவர்கள், சிவாஜிகணேசனை விட நடிப்பில் பின்னியிருக்கிறார். அந்த காட்சியில் நாகேஷ்தான் ஹீரோ, என புகழ்ந்திருக்கிறார்கள். அந்த காட்சியை பார்த்து வியந்த சிவாஜி, நாகேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார். எதையும் கட் செய்யாமல் அப்படியே வையுங்கள் என இயக்குனர் ஏபி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்.

  நடிகன்

  நடிகன்

  நாகேஷின் உடலமைப்பு மிக வித்தியாசமானது. ஒரு ஜிம்னாஸ்டிக் வீரரைப் போல பல முறைகளில் உடலை வளைக்கக் கூடியவர். மாடிப்படிகளில் அவசரமாக ஓடி வா என்றால் அது தத்ரூபமாக வரவேண்டுமென்று ஓடி குதித்து உருண்டு எழுந்து வருவாராம். அதற்கு காரணம் எம்.ஆர்.ராதா என சொல்லப்படுகிறது. நாகேஷின் முதல்படமான "தாமரைக்குளம்" திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, நாகேஷுக்கு நடிக்கவே தெரியவில்லை என உதவி இயக்குனர்கள் கிண்டலடித்துள்ளனர். அதைக் கண்ட எம்.ஆர்.ராதா "மத்தவனெல்லாம் நடிகன்" நீ கலைஞன். நீ கவலைப்படாமல் நடி என்று தைரியமூட்டியிருக்கிறார். கடைசிவரை கலைஞனாகவே இருக்க வேண்டுமென்று கோடுபோட்டு வாழ்ந்த மனிதர் நாகேஷ்.

  டைமிங்

  டைமிங்

  பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் காருக்குள் குடித்திருப்பதைப் பார்த்து "யோவ் பெருசு இந்த வயசுல குடிக்கிறியே..." எனக் கேட்கும்போது "இந்த வயசுல குடிக்கலன்னா அப்புறம் குடிக்கவே முடியாதே" என்பார். அதுதான் நாகேஷின் டைமிங். நாகேஷின் உடல்மொழியை பலரும் மேடைகளில் நடித்து புகழ் பெற்றுள்ளனர். ஆனால் நாகேஷின் குரலை மிமிக்ரி செய்தவர்கள் மிக மிகக் குறைவே. இவர் இப்படித்தான் பேசுவார் என்று அவருடைய குரலுக்கென ஒரு இலக்கணம் இருந்ததாகத் தெரியவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  முகத் தழும்பு

  முகத் தழும்பு

  நாகேஷின் அந்த தழும்பு முகம் அம்மை கொடுத்தது. 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் அவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட புள்ளிகள் நிரந்தரத் தழும்புகளாய் மாறிப் போயின. அதனால் அந்த நாளை தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என நாகேஷ் சொல்வார்.

  எம்ஜிஆர்

  எம்ஜிஆர்

  நகைச்சுவை நடிகர் என்று அறியப்பட்டாலும், நீர்க்குமிழியில் குணச்சித்திர நடிகர், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் படங்களில் கதாநாயகன், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன், மகளிர் மட்டும் திரைப்படத்தில் பிணம் என பல முத்திரை பதித்தவர். எம்ஜிஆரின் படங்களில் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக இருந்தவர் நாகேஷ். ஒரு நாடகத்தில் வயிற்று வலி வந்தவனாக சிறப்பாக நடித்ததற்கு முதன்முதலில் எம்ஜிஆரின் கையால் வெள்ளிக் கோப்பையை பரிசாக பெற்றுள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் எம்ஜிஆருடன் நடித்துள்ளார். அதில் 19 படங்களில் மனோரமாவுடன் ஜோடி போட்டுள்ளார். சிறப்பான நடிப்புக்காக தமிழக அரசினால் கலைமாமனி விருதுபெற்றுள்ளார் நாகேஷ். தசாவதாரம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, "என் கடைசிப்படம் நல்லப்படம் ஐ ஆம் ஹானர்டு டா கமல்" என்றாராம். அவரின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் அதுவே அவரின் கடைசிப்படமாக அமைந்தது.

  English summary
  Today is actor Nagesh 85th birth anniversary. He had acted in more than thousand movies. He was celebrated as Jerry Lewis of Tamil Cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X