சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் நந்தன் படத்தின் பாடல்கள் வெளியானது!
Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் ...

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது...
படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும், படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். இயக்குனர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தை தொடங்கினார், அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்த படத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார்.
இந்த கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், 'சோப்புலிங்கம்' கேரக்டரை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார், நான் தயங்கினேன். முதன்முதலில் சமுத்திரகனி தான் என்னை நடிக்க கேட்டார். ஆனால் நான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டேன். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நடித்த பிறகு, அனைவரும் என்னை நடிகனாக நம்பி விட்டார்கள். நான் நல்ல நடிகன் என்ற நம்பிக்கை இல்லை, நான் ஒரு இயக்குனர் தான், நன்றாக நடித்தேன் என அவர்கள் சொன்னால் மகிழ்ச்சி. இயக்குனர் சரவணன் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூக பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது.
சரவணன் தயாரிப்பாளர் என்பதால், எந்த சமரசம் இல்லாமல், இந்த திரைப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். '16 வயதினிலே' படத்திற்கு பிறகு, அப்படி ஒரு உழைப்பை சசிகுமார் இந்த திரைப்படத்திற்காக தந்திருக்கிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதால் சொல்லவில்லை, உண்மையாகவே மிக அற்புதமான திரைப்படம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
இயக்குநர் ஹெச். வினோத் பேசியதாவது...
நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் "உடன்பிறப்பே" மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம். அனைவருக்கும் நன்றி.
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் பேசியதாவது...
எங்களை வாழ்த்த பல வேலைகளுக்கு மத்தியில் இங்கு வந்திருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கும், இயக்குநர் வினோத் முதலான பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
இயக்குநர் சரவணனை எப்போது பார்க்கும்போதும் என் படத்தின் ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வரும், 'உங்க நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, ' என்கிற வசனம் தான் அது. உண்மையிலேயே சரவணன் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் குழந்தை என அனைத்தையும் விட்டுவிட்டு, சென்று நிற்பவர் தான் சரவணன், இப்போது அவர் பின்னால் நிற்பவர்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இயக்குநர் பின்னால் எப்போதும் துணையாக நிற்பது அவர் மனைவி கலா அக்கா தான், அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு வந்து, இந்த படத்திற்காக பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார். நாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் விட, அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம். அதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும், நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பின்னால் விருதுகளே கிடைக்கும்.
இந்த படத்தை முதலில் நான் தயாரிப்பதாக தான் இருந்தது, அப்போது நான் நான்கு நாட்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன் ஆனால் இறுதியில் நான் நாயகனாக மாறிவிட்டேன். முதலில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது, பின்னால் அவர் படும் கஷ்டத்தை பார்த்து, நானே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.
உங்களை வேறு மாதிரி பார்க்கிறேன், எப்படி இந்த கேரக்டரில் கஷ்டப்படுத்துவது என தயங்கினர், ஆனால் நான் அவரை சமாளித்து, நடித்திருக்கிறேன். எங்கள் படத்தை நாங்களே நன்றாக இருக்கிறது என்று சொல்வதை விட , நீங்கள் பார்த்து சொல்லுங்கள், இந்த திரைப்படம் உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக திருப்தி செய்யும்.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற போது, நான் யோசித்தது ரவி சாரை தான், அவர் மிக கறாராக இருக்க கூடியவர். ஆனால் அவரே படத்தை துளி துளியாக ரசித்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி கண்டிப்பாக மக்கள் எல்லோரும் ரசிப்பார்கள். அனைவருக்கும் நன்றி.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது....
இன்று நந்தன் இசை வெளியீடு, இறைவனைக் காண இசை பாடல் பாடிய வரலாறு நம்மிடம் இருக்கிறது. ஆனால் இந்த இசை வெளியீடு, இறைவனைக் காண அல்ல, மனிதனைக் காண !. மனிதனைக் காண்பதற்கு வெளியிடும் இசைதான் இந்த நந்தன். நாம் ரசிப்பதற்கு அல்ல, இந்த இசை, நாம் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தான் இந்த இசை. இந்த இசையை உருவாக்கி இருக்கும் நண்பர் ஜிப்ரானுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம் நண்பர் நம் இயக்குநர் இரா சரவணன் உருவாக்கி இருக்கிறான். பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன்.
இந்தப்படம் மிகப்பெரும் தாக்கத்தைப் பார்த்த பிறகும் இன்றும் தந்துகொண்டு இருக்கிறது. என் தம்பி சசி நடித்த அயோத்தி திரைப்படத்தைப் பார்த்து நான் பாராட்டி இருந்தேன். அந்த திரைப்படத்தில் அவன் சசியாகவே இருந்தான், ஆனால் இந்த நந்தன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்தே கூழுப்பானையாகவே மாறி இருக்கிறான் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அப்படி ஒரு உடல் மொழி, அருமையான உச்சரிப்பு, அவ்வளவு அருமையான நடிப்பு, அதே போல் மிகச்சிறப்பான நடிப்பை, வழங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதி. அவர் நடிப்பும் கண்டிப்பாகப் பேசப்படும். அதேபோல் மிக முக்கியமான பாத்திரத்தில் நண்பன் சமுத்திரகனி மிக அருமையாக நடித்து இருக்கிறான். படத்தை தாங்கி நிற்கும் தூணாக மிக முக்கியமான பாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.
மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான், ஒருவர் கூட ஒரு சிறு முகச்சுழிப்பை கூட தவறாக நடிக்கவில்லை, அத்தனை அற்புதமாக நடித்துள்ளனர்.
மனதைத் தாக்கும் மிக நல்ல படைப்புகளை பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆளுமைகள் வழங்கி வந்தார்கள். இப்போது அப்படியான படைப்புகள் வருவதே இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ஒரு சிறந்த படைப்பாக இந்த திரைப்படம் வந்திருக்கிறது. மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான் சரவணன். வலியின் மொழி தான் இந்த திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு ஒரு ஆகச் சிறந்த படைப்பு, என் தம்பிகள் இணைந்து மிகச் சிறந்த படைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவனோடு இணைந்து ஒத்துழைத்து, இப்படைப்பை வழங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











